தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வரும் அங்குரார்ப்பண தெற்காசிய மகளிர் ஃபுட்சால் சாம்பியன்ஷிப்பில், நேபாளத்தை எதிர்த்தாடிய இலங்கை மிகவும் அற்புதமாக விளையாடி அப் போட்டியை 2–2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.
இலங்கை வீராங்கனைகளின் இந்த ஆற்றல் வெளிப்பாடு பாராட்டத்தக்கதாகும்.

இலங்கை சார்பாக தர்மிகா சிவனேஸ்வரன் மற்றும் தரிந்தி வெலிவிட்ட ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.
இலங்கை குழாத்தில் பாஸ்கரன் ஷானு, கௌரி சுரேந்திரன் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், இந்த போட்டி இலங்கைக்கு குறைந்த நேரத்தைக் கொண்ட விளையாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது என்றார்.

‘இது இலங்கைக்கு ஃபுட்சால் விளையாட்டில் ஒரு புதிய தொடக்கமாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் வலுவான ஃபுட்சால் அணிகளை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். எதிர்வரும் காலங்களில், ஃபுட்சால் நாட்டின் சகல பகுதிகளிலும் பிரபலமான விளையாட்டாக மாறும் திறனைக் கொண்டுள்ளது. அதற்கு அமைய ஃபுட்சால் வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுக்கு விசேட பயிற்சி அளிக்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் காத்திரமான திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது’ என அவர் மேலும் கூறினார்.
தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனம் (SAFF) ஏற்பாடு செய்துள்ள அங்குரார்ப்பண சாம்பியன்ஷிப்பில் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஃபுட்சால் அணிகள் பங்குபற்றுகின்றன.
இது இலங்கையின் கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்தும் கட்டமைப்பிற்குள் ஃபுட்சாலை ஒரு முக்கிய விளையாட்டாக விஸ்தரிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்னம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.


