நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்தார்.
டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரிடருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜப்பான் அரசு யுனிசெஃப் (UNICEF) ஊடாக இலங்கைக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், டிசம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருடன் இணைந்து, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்கவை சந்தித்து, சுகாதார உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை கையளித்தனர். இதன்போதே ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
500,000 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த நிவாரணப் பொருட்கள், டிசம்பர் 16 ஆம் திகதி ஜப்பான் அரசாங்கம் அறிவித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நன்கொடை உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
குறித்த அவசர நிதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM), உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காகக் கொண்டு, குழந்தைகளுக்கான பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல், உளவியல் ஆதரவு வழங்குதல், நீர், சுகாதாரம் மற்றும் சுத்தம் (WASH) தொடர்பான நடவடிக்கைகள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட தலையீடுகளுக்கு ஜப்பான் யுனிசெஃப் ஊடாக ஆதரவு வழங்கப்படவுள்ளது.
இந்த உதவியின் மூலம் அவசரகால நீர் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குதல், சேதமடைந்த நீர் விநியோக வசதிகளை சீரமைத்தல், நீரினால் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதுடன், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும் இந்த உதவி முக்கிய பங்காற்றும் என ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை மக்களுடன் ஜப்பான் அரசு முழு ஒற்றுமையுடன் நிற்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
