நாட்டில் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வருகை தந்த ஐக்கிய அரபு இராச்சிய குழு, தனது மனிதாபிமான பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
இந்த அவசர நிவாரண நடவடிக்கை, ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யானின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஐக்கிய அரபு இராச்சிய நிவாரண குழு, மொத்தமாக 116 மெட்ரிக் தொன் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இதில் உணவுப் பொருட்கள், தற்காலிக தங்குமிடங்களுக்கு தேவையான கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சிய தேடுதல் மற்றும் மீட்பு குழு உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, விசேட கள நடவடிக்கைகள் மூலம் காணாமல் போன 20 பேரின் உடல்களை மீட்டெடுத்தது. அதேபோல், சிறிய காயங்களுக்குள்ளான 8 பேருக்கு வைத்திய சிகிச்சையும் வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சிய நிவாரண குழுத் தலைவர், இலங்கைக்கும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க ஐக்கிய அரபு இராச்சிய உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
மனிதாபிமான சேவை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அடிப்படை கொள்கையாகும் எனவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் முழுமையாக மீண்டு வரும்வரை அவர்களுடன் தோளோடு தோள் நின்று செயல்படுவதே அந்த நாட்டின் நிலையான அர்ப்பணிப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.










