உலக தமிழர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன் ‘படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன் ‘எனும் திரைப்படத்தில் விஜய் ,பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் பொலிட்டிகல் எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வரும் நிலையில்… இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தளபதி விஜயின் தாயாரான ஷோபா சந்திரசேகர் பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஹெச் . வினோத் பேசுகையில், ” ஜனநாயகன் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் அல்ல. இது விஜய் ரசிகர்கள் படமாளிகையில் கொண்டாடும் வகையினதான நூறு சதவீத கொமர்சல் திரைப்படம் ” என்றார்.
இதைத் தொடர்ந்து தளபதி விஜய் பேசியதாவது….
* அனிருத்திற்கு நான் எம் டி எஸ் என பெயர் வைக்கிறேன். எம் டி எஸ் என்றால் மியூசிக் டிபார்ட்மென்டல் ஸ்டோர். இந்த கடைக்கு நீங்கள் போனால் எல்லாவித பாடல்களும் கிடைக்கும்.
* எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த என் ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்.
* எனது இறுதி படத்திற்கான இசை வெளியீட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்துவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன்.
*ஒரு பெரிய கடலில் ஒரு சிறிய மணல் வீட்டை கட்ட வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவிற்குள் நுழைந்தேன். ஆனால் என் ரசிகர்கள் அதை ஒரு பெரிய கோட்டையாக மாற்றினார்கள். நான் பல போராட்டங்களை சந்தித்தேன். ஆனால் முப்பது வருடங்களாக என் ரசிகர்கள் எனக்காக என்னுடன் நின்றனர். இப்போது அடுத்த முப்பது வருடங்களுக்கு அவர்களுடன் நான் நிற்க விரும்புகிறேன்.
*மலேசியா என்று சொன்னாலே என் நண்பர் அஜித்தின் ‘பில்லா’ திரைப்படம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதைத்தொடர்ந்து சுய முன்னேற்றத்திற்கான குட்டிக்கதை ஒன்றையும் தளபதி விஜய் மேடையில் பேசினார்.
தளபதி விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது என்பதும், இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
