கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்தார். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் அவர், இசையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் இப்போது நவீன தொழில்நுட்ப வடிவமான ஆப்ஸ் மீடியாவில் தொகுப்பாளினி ஆகியிருக்கிறார். ஓடிடி என்ற வீடியோ சேவை நிறுவனம் நடத்தும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஆகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குகிறார். காபி வித் டிடி மாதிரி இது செலிபிரிட்டிகளை சுதந்திரமாக பேட்டி எடுக்கும் ஒரு அரட்டை நிகழ்ச்சியாகும். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது:
பொழுதுபோக்கு துறையில் வேலை செய்யும் எவரும் பொதுவெளியில் பெரும்பாலும் அவர்களாகவே, வெளிப்படையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ஹலோ சகோவின் மூலம் பார்வையாளர்கள் பிரபலங்களின் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியும். அவர்களின் நேர்மையான உரையாடல்களால் அவர்களின் அழகான வாழ்க்கை பயணங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். என்கிறார் ஸ்ருதி.