நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகவும், தேவையற்ற பீதியை உருவாக்கத் தேவையில்லை என்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனவே அநாவசியமாக அதிகளவான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு நுகவர்வோர் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகளவான பொருட்களைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும், தங்களுக்கு உண்மையில் தேவைப்படும் அளவை மட்டுமே வாங்குமாறும் அதிகாரசபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தகர்கள், நுகர்வோருக்குத் தேவையான அளவை மட்டுமே வழங்குவதை உறுதிசெய்து, பொருட்களைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விநியோகிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் ஆதரவளிக்கும் வகையில், வர்த்தக சமூகம் நிலவும் மற்றும் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும் என்றும் அதிகாரசபை அழைப்பு விடுத்துள்ளது. நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கண்டறிய நாடு முழுவதும் சிறப்பு கண்காணிப்புக்களும் சோதனைகளும் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்கள் அதிக விலைகளில் விற்கப்படுவதை அவதானிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் நேரடியாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபைக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அதிகாரிகள் பொருட்களின் நியாயமான விற்பனை மற்றும் விநியோகத்தை நெருக்கமாக கண்காணிப்பார்கள் என்றும், இணங்கத் தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நன்கொடை சேகரிப்பதாகக் குறிப்பிட்டு வீடுகளுக்கு வரக்கூடிய பொறுப்பற்ற நபர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

