தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்

கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் பாடகி ஒருவர் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானின் இசையில் முதல் தடவையாக முழுப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் என்ற செய்தி அறிந்திருப்பீர்கள்.

இந்தப் பெருமையைப் பெறுபவர் ரொறன்ரோவில் பிறந்து வளர்ந்த கனடிய தமிழ் பாடகியான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

இந்தப் பாடல் ஒலிபதிவு குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களை வலைத்தளம் ஊடாக இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தன.  ஒருவகையில் இந்தச் செய்தியை கனடியத் தமிழர்கள் மாத்திரமல்லாது புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலும் வாழும் தமிழர்களும் ஒரு கொண்டாட்டமாகவே எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தின் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளும் அதன் மூலம் வெளிவரும் புதிய குரல்கள் பின்னணிப் பாடகர்களாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் நிகழ்வுகளும் நாளாந்தம் எங்கள் வரவேற்பறைவரை வந்து ‌சேதி சொல்லும் காலம் இது. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை அண்மைக் காலத்தில் இவ்வாறான புதிய திறமைகளுக்கு சந்தர்ப்பம் வ‌ழங்கும் இசையமைப்பாளர்களில் டி.இமான் பிரதானமானவர்.

ஆனாலும் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்திற்கு கிடைத்த இந்தப் பாடலுக்கான சந்தர்ப்பம் பாடல் போட்டி நிகழ்ச்சி மூலம் கிடைத்ததல்ல. பல்வேறு வகையிலான(genres) இசைத் தி‌றமைகளை வெளிப்படுத்தும் பாடல்களை youtube  மற்றும் instagram ஊடக பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டவர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

அவ்வாறானதொரு பாடல் இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் கனடாவில் தனது இசை நிகழ்ச்சிக்காக வந்திருந்த இசையமைப்பாளர் டி.இமானை சந்திக்கச் சென்ற‌போது லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தை அடையாளம் கண்டு அவர் பகிர்ந்துகொள்ளும் பாடல்களை தான் ஏற்கனவே கேட்டிருப்பதாகவும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்  டி.இமான். தனது கனடியப் பயணத்தின் முடிவில் வெவ்வேறு வகையிலான(genres) குரல் பதிவுகளை தனக்கு அனுப்பி வைக்குமாறும் தகுந்த சந்தர்ப்பத்தில் தொடர்புகொள்வதாகவும் உறுதி வழங்கியிருந்தார்.

ஆனாலும் அந்தச் சந்தர்ப்பம் விரைவில் கை கூடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். திடீரென வந்தது அந்த அழைப்பு. 13 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீற்றர் தாண்டிய விமானப் பயணத்தின் பின்னர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரலில் இமானின் புதிய மெட்டு ஒலிப்பதிவானது.

இயக்குனர் லக்ஷ்மணின் இயக்கத்தில், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா தயாரிக்க ஜெயம் ரவி, ஹன்சிக்கா  மற்றும் அரவிந் சுவாமி இணைந்து நடிக்கும் “போகன்” என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடல் சென்னையில் ஒலிப்பதிவாகியுள்ளது. பிரபலமான பாடலாசிரியர் தாமரை  இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்பது சிறப்புச் ‌செய்தியாகும். லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் இசையமைப்பாளர் இமானுக்காக பாடியுள்ள இந்தப் பாடல் ஒரு பெண் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஒரு (romantic solo) தனிப்பாடலாகும். இதன் மூலம் இசையமைப்பாளர் இமானுக்காக இலங்கைத் தமிழர் ஒருவர் முழுமையான தனிப்பாடல் ஒன்றை முதல் தடவையாக பாடியுள்ள அங்கீகாரத்தை லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பெறுகின்றார்.

கனடாவின் பல மெல்லிசை மேடைகளில் நீங்கள் கண்ட ஒரு இளம் பாடகிதான் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இசை இவருக்கு புதிதல்ல. தனது நான்கு வயது முதல் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்ற லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் western classical துறையில் தனது இளங்கலை பட்டத்தைப் பெற்றவர். தற்போது Wilfred Laurier பல்கலைக்கழகத்தில் இசை கற்பிப்பதற்கான முதுகலைக் கல்வியை தொடர்கின்றார்.  இதுதவிர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் கர்நாடக சங்கீதத்தில் பட்டம் பெற்றவர்.

சிறு வயது முதல் மெல்லிசைப் பாடல்களை பாட ஆரம்பித்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞராவார். பரதநாட்டியத்தை கற்பிப்பதுடன் வீணை மற்றும் பியாணோ ஆகிய வாத்தியக் கருவிகளையும் சிறப்பாக கையாளும் திறமை கொண்டவர் இவர்.

ஏற்கனவே பல்வேறு பாடல்கள் இவரது குரலில் பதிவாகியுள்ளன. ரமேஸ் மகாலிங்கம், அஜித், கபிலேஸ்வர்  மற்றும் Steve Cliffe அகியோர் உட்பட பலரது இசையில் பாடிய அனுபவம் உள்ளவர்  லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இதுதவிர மாவீரர் தினத்திற்காக கனடாவில் வெளியான இரண்டு இசைத்தட்டுக்களிலும் பாடியுள்ளார்.  இதுபோன்ற ஒளிப்பதிவுகள் , மேடை நிகழ்ச்சிகளில் தான் பாடிய அனுபவங்கள், மற்றும் இசைச்துறையில் தனது கல்வி உட்பட தனக்கு இசை கற்பித்த ஆசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர் ஆதரவு தற்போது தென்னி ந்திய திரைப்படத்தில் பாடும் சந்தர்ப்பத்தையும் அதற்கான நம்பிக்கையை தந்துள்ளதை எங்களுடனான உரையாடலில் சுட்டிக்காட்டினார் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்.

லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பாடிய பாடல் உட்பட ”போகன்” திரைப்படப் பாடல்கள் உலகளாவிய ரீதியில் செப்ரெம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

15,876 total views, 7,917 views today

– See more at: http://www.canadamirror.com/canada/76507.html#sthash.WT8YaWMT.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News