தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் , பான் இந்திய நடிகராகவும் புகழ்பெற்றிருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிடி இயக்கத்தில் உருவாகும்’ #DQ 41 ‘ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அனய் ஓம் கோஸ்சுவாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இளமை ததும்பும் காதல் கதையாக தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார்.
ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார். இவருடன் இயக்குநர்கள் ஸ்ரீகாந்த் ஒதெலா – புஜ்ஜி பாபு சனா ஆகியோரும் பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் பத்தாவது திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகும் பான் இந்திய திரைப்படமாக தயாராகிறது என்றும், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.