துருக்கி சிரியாவை மீண்டும் தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
தென்துருக்கியில் சில வாரங்களிற்கு முன்னர் பூகம்பம் தாக்கிய பகுதியே மீண்டும் அவலத்தை எதிர்கொண்டுள்ளது.பாரிய பூகம்பத்தை தொடர்ந்து பல சிறிய அதிர்வுகள் காணப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களிற்கு முன்னர் பாரிய அழிவை சந்தித்த அன்டக்யா டெவ்னே மற்றும் சமன்டகி பகுதிகளில் மூவர் உயிரிழந்துள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ஆபத்தான கட்டிடங்களிற்குள் மீண்டும் செல்லக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துருக்கியில் 213 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பூகம்பத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அன்டக்யா நகரில் மேலும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனது காலுக்கு அடியில் நிலம் பிளக்கப்போகின்றது என நினைத்தேன் என தனது ஏழு வயது மகனை பிடித்தபடி முனா அல் ஓமர் என்ற தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டு பூங்காவில் கூடாரமொன்றில் வசித்து வரும் சந்தர்ப்பத்திலேயே அவர் இரண்டாவது பூகம்பத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதேவேளை சிரியாவில் சுமார் 500 பேர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரங்களை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை பூகம்பத்தை தொடர்ந்து 32 சிறிய அதிர்வுகள் காணப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
துருக்கியில் பூகம்பம் பாதித்த இடங்களில் பதற்றம் காணப்படுகின்றது அம்புலன்ஸ்களும் மீட்பு குழுவை சேர்ந்தவர்களும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.