திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை வழங்கும் அரச நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (23) நாரஹேன்பிட்டியில் உள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மீனவர்களுக்கு நிதி உதவிக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், இந்த அனர்த்தம் சுனாமிப் பேரழிவை விட நான்கு மடங்கு அதிகமான பொருளாதாரப் பாதிப்பை (4.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஏற்படுத்தியதாகச் சுட்டிக்காட்டினார். “நாடு கடும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இருந்தாலும், எமது அரசாங்கம் 200 வீதம் மீனவ மக்களுடன் நிற்கிறது. எமது நோக்கம் வெறுமனே பழைய நிலைக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல, நவீன தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதிச் சந்தையை இலக்காகக் கொண்டு இந்தக் தொழிற்துறையை பலமாகக் கட்டியெழுப்புவதாகும்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.
சேத மதிப்பீடு மற்றும் அரசாங்கத்தின் துரித நடவடிக்கைகளை விளக்கிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், கடற்றொழில் துறைக்கு மட்டும் 765 கோடி ரூபா (7,650 மில்லியன் ரூபா) பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், மீனவ மக்களை மீளக்கட்டியெழுப்புவதற்காகப் பின்வரும் நிவாரணங்கள் இன்று முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்:
சேதமடைந்த நன்னீர் மீன்பிடிப் படகுகள்: முற்றாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த 405 வள்ளங்களுக்காக தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 40.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மீன்பிடி வலை உபகரணங்கள்: 3,246 மீனவர்களுக்கு 12,423 மீன்பிடி வலைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக 186.34 மில்லியன் ரூபா நிதி.
அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள் குறிப்பிடுகையில், தொழிநுட்ப ரீதியான சேத மதிப்பீட்டின் ஊடாக மிகக் குறுகிய காலத்தில் இந்த நிதியை நேரடியாக மீனவர் சங்கங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய அவர்கள், அனர்த்தத்தின் போது மீனவ சமூகம் காட்டிய தைரியத்தைப் பாராட்டியதோடு, கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி உற்பத்தித் திறனை முன்னரை விட உயர்த்துவதற்கு ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டார்.





