மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். விஜய் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 10ல் ஆரம்பமானது.
இப்படத்திற்காக நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்றார் கங்கனா. அடுத்து படத்திற்காக தமிழ் கற்க ஆரம்பித்துள்ளாராம். அது பற்றி மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுகிறேன். முன்பே தமிழ் கற்க ஆசைப்பட்டேன். ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டுள்ளேன். இப்போது ‘தலைவி’ படத்திற்கு தமிழ் கற்க வேண்டியது அவசியம் என்பதால் கற்று வருகிறேன்,” என்றார்.
எத்தனையோ தமிழ்ப் படங்களில் நடித்த சில ஹிந்தி நடிகைகள் இதுவரையிலும் தமிழில் வணக்கம் தவிர வேறு எந்த வார்த்தையையும் பேசியதில்லை. ஆனால், ‘தாம் தூம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது தமிழ்ப் படத்தில் நடிக்கும் கங்கனா, ‘தலைவி’க்காக தமிழ் கற்க ஆரம்பித்திருப்பது அவருடைய ஈடுபாட்டைக் காட்டுகிறது.