Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தண்டகாரண்யம் – திரைப்பட விமர்சனம்

September 19, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
நடிகர்கள் தினேஷ் – கலையரசன் இணைந்து மிரட்டும் ‘தண்டகாரண்யம் ‘ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

தண்டகாரண்யம் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : லேர்ன் & டீச் புரொடக்ஷன் 

நடிகர்கள் : தினேஷ், கலையரசன், பால சரவணன், ஷபீர் கல்லரக்கல், அருள்தாஸ், முத்துக்குமார், ரித்விகா, வின்சு ராம், யுவன் மயில்சாமி, கவிதா பாரதி, அஜித் கோஷி மற்றும் பலர்.

இயக்கம் : அதியன் ஆதிரை

மதிப்பீடு : 2.5/5

பா.ரஞ்சித்தின் தயாரிப்பு – சிவப்பு சிந்தனை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் அதியன் ஆதிரையின் இயக்கம் – தண்டக்காரண்யம் எனும் தலைப்பு- ஆகியவை பட வெளியீட்டிற்கு முன்னரே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் படைப்பை காண பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களின் கவனத்தை படக்குழுவினர் கவர்ந்தார்களா?இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவப்பட்ட எனும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் கிராமத்தில் சடையன்( தினேஷ்)  – முருகன் ( கலையரசன்) எனும் சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் இவர்களில் முருகன் ‘ஏ’ லெவல் வரை கல்வி கற்றிருப்பதால்… கடும் முயற்சிக்குப் பிறகு வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியில் சேர்கிறார். இவர் பிரியா ( வின்சு ராம்) எனும் பெண்ணை காதலிக்கிறார் .

திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார். ஆனால் பிரியாவின் தாயோ, ‘அரசாங்க உத்தியோகம் உனக்கு இல்லாததால் பெண் தர மாட்டேன்’ என சொல்லிவிட, அரசாங்க பணி உறுதிக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் முருகனின் சகோதரரான சடையன் மண்ணையும், வன வளத்தையும் காக்கும் சமூக போராளியாக வலம் வருகிறார். இவரின் ஒரு செயலால் வனத்துறை அதிகாரிகள் முருகனின் ஆவணங்களை எரித்து விடுகிறார்கள்.

இதனால் அரசாங்க உத்தியோகம் இல்லை என்ற நிலை உருவாகி விட… அந்தத் தருணத்தில் வட இந்தியாவில் உள்ள ராஞ்சி எனும் இடத்தில் நடைபெறும் இந்திய ராணுவத்தின் துணை பிரிவில்.. மூன்று மாதம் பயிற்சி பெற்றால்.. துணை ராணுவ பிரிவில் பணியாற்றலாம் என ஒரு கும்பலால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்.

இதனை உண்மை என்று நம்பிய சடையன் குடும்பத்தினர் ..தங்களுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று முருகனை இந்த பயிற்சி முகாமிற்கு அனுப்புகிறார்கள்.

ஆனால் அந்த பயிற்சி முகாமில் அதிகாரிகள் முதல் உடன் பயிற்சி பெறுபவர்கள் வரை முருகன் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். அவருடைய உணர்வுடன் மோதுகிறார்கள்.

முருகனுக்கு அரசாங்க பணி தான் உச்சபட்ச இலக்கு என்பதற்காக… அனைத்து விதமான கொடுமைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டு எதிர்கொள்கிறார். இவருடைய அணுகுமுறை இவர் மீது வெறுப்பை உமிழும் அமிதாப் ( ஷபீர் கல்லரக்கல்) எனும் சக வீரரை யோசிக்க வைக்கிறது. அதன் பிறகு இவருடன் நட்பு பாராட்டுகிறார்.

இந்த தருணத்தில் முகாமில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை வாய்ப்பு என்று அழைத்துச் சென்று, அவர்களை போலி என்கவுண்டர் செய்வதையும், அதில் அமிதாப் பலியாகிவிட்டார் என்ற செய்தியையும் முருகன் அறிந்து கொள்கிறார்.

அதன் பிறகு முருகன் உள்ளிட்ட குழுவினரும் பயிற்சி நிறைவு என்று சொல்லி,  துணை ராணுவத்தில் வேலை வாய்ப்பு என்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இவர்கள் மீதும் போலியான என்கவுண்டர் நடைபெற்றதா? இல்லையா ? என்பதே இப்படத்தின் கதை.

நக்சல்பாரிகள் அழிப்பு எனும் பெயரில் இந்திய அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது நடத்திய போலி என்கவுன்டரைப் பற்றிய  உண்மை சம்பவத்தை தழுவி  எடுக்கப்பட்ட படைப்பை… அதன் வீரியம் மாறாமல் அரச பயங்கரவாதத்தின் கொடூர முகத்தை படைப்பின் வழியாக  மக்களை காணச் செய்த இயக்குநர் அதியன் ஆதிரை உள்ளிட்ட படக் குழுவினருக்கு முதலில் பாராட்டை தெரிவித்து விடலாம்.

தமிழ்நாடு, வட இந்திய தண்டக்காரண்ய காட்டுப்பகுதி என கதை பயணிக்கும் இரண்டு கதைகளத்தையும் … பார்வையாளர்களுக்கு காட்சி மொழியாக கடத்தி ரசிகர்களை வியக்க வைக்கிறார்கள். 

அதிலும் வட இந்திய காட்டுப் பகுதிகளில் நடைபெறும் அதிகாரப்பூர்வமற்ற ராணுவ பயிற்சி முகாம் தொடர்பான காட்சிகள்.. மனித உரிமை மீறலுக்கான அப்பட்டமான சாட்சிகளாக பார்வையாளர்களின் மனதில் தங்குகிறது.

பழங்குடி இன மக்களின் வாழ்வியலை… அவர்களது நம்பிக்கையை… அவர்களது சமூகம் சார்ந்த பார்வையை… மிகவும் அணுக்கமாக அவதானித்து வெளிப்படுத்தி இருக்கும் படைப்பாளியை பாராட்டலாம்.

திரைக்கதையின் அடர்த்தியும்,  நேர்த்தியும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. குறிப்பாக அமிதாப் – முருகன் இடையேயான நட்பு தொழில் முறையிலான நட்பை கடந்து உணர்வுடன் கலக்கும் தருணங்கள் அற்புதமானவை.

சடையன் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு – படைப்பின் சமநிலையை உணர்த்துவதற்காக படைக்கப்பட்டிருந்தாலும்.. அதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை கச்சிதமாக இணைத்திருப்பதால் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறது.

வனங்களில் வாழும் பழங்குடியின மக்களை …கொர்ப்பரேட் முதலாளிகள் – அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள்-  அதிகார வர்க்கத்தின் எடுபிடிகளான வனத்துறையினர்-  சிறிதும் மதிப்பளிக்காத நடைமுறை நிஜம் பார்வையாளர்களை சுடுகிறது.

இதற்கு சடையன் கதாபாத்திரம் பதிலடி தரும் போது உற்சாகமடைகிறது. சடையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தினேஷ் – பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.

முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் பன்முக தன்மை கொண்ட இந்த கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.

அமிதாப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகரும் , ‘டான்சிங் ரோஸ்’ என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவருமான சபீர் கல்லரக்கல் அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களை கவர்கிறார்.

பிரியா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை வின்சு ராம், வன சரக அலுவலராக நடித்திருக்கும் அருள்தாஸ், பால சரவணன் – யுவன் மயில்சாமி- முத்துக்குமார்- கவிதா பாரதி- என ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள்.

அதிகார வர்க்கத்தின் ஆணவத்துடன் கூடிய வன்முறையான போக்கினை எந்தவித சமரசமும் இல்லாமல் வழங்கியதில் படக்குழு வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர் ஆகிய இருவரும்  தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருப்பதால் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள். 

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால்.. போலியாக நடத்தப்பட்ட என்கவுண்டர் என்ற உண்மை சம்பவத்தை தணிக்கை சான்றிதழுக்கான சிறிய சமரசத்துடனும், துணிச்சலுடனும் வணிக சினிமாவாக வழங்கியிருப்பதால்.. அதனை கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து விடுவது சிறந்தது.

‘காவ காடே’ எனும் பாடலும், பின்னணி இசையும் காதில் ரீங்காரமிடுகின்றன.  இளையராஜாவின் இசையில் வெளியான :மனிதா மனிதா..’ மற்றும் ‘ஓ பிரியா பிரியா..’ ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டத்தக்கது.

வனப்பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்வியலையும், அரசியல் அழுத்தம் காரணமாக அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் வஞ்சகமான மனித அழிப்பு தாக்குதலையும்  அதன் பின்னணியுடன் விவரித்திருப்பதால் தண்டக்காரண்யம் ரசிகர்களை அதிகார வர்க்கத்தின் துஷ்பிரயோக அரசியல் குறித்த எண்ணத்தைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறது.

தண்டகாரண்யம் –  அரச பயங்கரவாதத்தின் கொடூர முகம்.

Previous Post

ரோபோ சங்கருக்கு என்ன ஆனது? திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா?

Next Post

நடிகர் அதர்வா முரளி வெளியிட்ட ‘ரைட்’ படத்தின் முன்னோட்டம்

Next Post
நடிகர் அதர்வா முரளி வெளியிட்ட ‘ரைட்’ படத்தின் முன்னோட்டம்

நடிகர் அதர்வா முரளி வெளியிட்ட 'ரைட்' படத்தின் முன்னோட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures