அயர்லாந்துக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் திங்களன்று (20) மழையினால் தடைப்பட்ட 2ஆம் குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 3ஆவது அணியாக மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, ஸ்ம்ரித்தி மந்தனாவின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைக் குவித்தது.
ஸ்ம்ரித்தி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 87 ஓட்டங்களை விளாசி இந்தியா பலமான நிலையை அடைய உதவினார். சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் மந்தனா பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
முதலாவது விக்கெட்டில் ஷஃபாலி வர்மாவுடன் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த மந்தனா, 2ஆவது விக்கட்டில் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோருடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஷஃபாலி வர்மா 24 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் 13 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஜெமிமா ரொட்றிகஸ் 19 ஓட்டங்களைப் பெற்றார்.
அயர்லாந்து பந்துவீச்சில் லோரா டிலேனி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது கடுங்காற்றுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
அயர்லாந்தின் ஆரம்பம் சிறபப்பாக அமைய வில்லை. அமி ஹன்டர் (1), ஓலா ப்ரெண்டர்காஸ்ட் (0), ஆகிய இருவரும் முதலாவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தனர். (1 – 2 விக்.)
ஆனால், அதன் பின்னர் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய கெபி லூயிஸ், அணித் தலைவி லோரா டிலேனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சவால் விடுத்தனர்.
அவர்களது துரதிர்ஷ்டம் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் வெற்றி இலக்கு 60 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
கெபி லூயிஸ் 5 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் லோரா டிலேனி 3 பவுண்டறிகள் அடங்கலாக 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
இன்று 2 போட்டிகள்
எட்டாவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கடைசி 2 முதலாம் சுற்று போட்டிகள் கேப் டவுனில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
அவற்றில் 1ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி தென் ஆபிரிக்காவுக்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமையவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள அப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் அணிகள் நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி கனவு தகர்ந்துவிடும்.
இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் நியூஸிலாந்துக்கும் தென் ஆபரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது அணியாக எந்த அணி அரை இறுதிக்கு செல்லும் என்ற போட்டி நிலவுகிறது.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
அப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும். இக் குழுவிலிருந்து இங்கிலாந்தும் இந்தியாவும் அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டதால் இந்தப் போட்டி அவ்வளவு முக்கியத்துவம் பெறாது.