பொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘அன்கில்_123’ எனும் திரைப்படம்- சமூக ஊடகத்தின் புகழ் வெளிச்சத்திற்கு ஆளான பிரபலத்தின் வாழ்வியலை விவரிக்கும் திரில்லராக தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் ‘ அன்கில்_123’ எனும் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்- சங்கீதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார். சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”புகழ் பெற வேண்டும் என்ற கனவுடன் சமூக ஊடகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக ஊடக ஆதிக்கவாதியாக பெயரைப் பெறும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் தொழில் சார்ந்த மன அழுத்தம் தொடர்பான சம்பவங்களை… எதிர்பாராத திருப்பங்களுடன் விவரிப்பது தான் இப்படத்தில் திரைக்கதை. இன்னும் எளிமையாக விவரிக்க வேண்டும் என்றால் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் ஒருவரின் பதிவிற்கு பின்னால் மறைக்கப்பட்டிருக்கும் விடயங்களை விவரிப்பது தான் இப்படத்தின் கதை” என்றார்.

