தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ஷாம் , ‘வரும் வெற்றி’ என்ற சுயாதீன இசை அல்பத்தை இயக்கி இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
நடிகர்கள் தங்களுடைய கலைச்சேவையின் எல்லையை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறார்கள். நடிப்பதுடன் மட்டுமல்லாமல் பின்னணி பாடுவது -படங்களை இயக்குவது- என தங்களுக்கு ஆர்வம் உள்ள துறையிலும் ஈடுபட்டு, அதிலும் புதிய சாதனையை படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரரான நடிகர் ஷாம் தற்போது ‘வரும் வெற்றி’ எனும் சுயாதீன இசை அல்பம் மூலம் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையில் உருவான இந்தப் பாடலை, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் கிச்சா சுதீப் பாடி இருக்கிறார். இந்த பாடலை பிரபல இசை நிறுவனமான டி சீரிஸ் வெளியிடுகிறது. இந்த சுயாதீன இசை அல்பத்தை எஸ் ஐ ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ல ஆம் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
அத்துடன் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் ஷாம் மற்றும் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளனர். இதற்கு மாஸ்டர் ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

