தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நமக்கான காலம்’ எனும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தின் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தி மொழி திணிப்பு குறித்த அரசியல் ரீதியான படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி பொங்கல் திருநாளன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நமக்கான காலம்..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுத பின்னணி பாடகர்கள் ஹரி சரண்- வேல்முருகன்- நாகாஷ் அஜீஸ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் மொழி பற்று குறித்து மாணவர்களின் உணர்வை விவரிக்கும் வகையில் உருவாகி இருக்கும் இந்த பாடல்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

