மட்டக்களப்பில் ‘சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புணர்வுப் பேரணி இன்று புதன்கிழமை (30) மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னால் ஆரம்பமாகி காந்தி பூங்கா வரை சென்றது.
இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இரா.மனோகரனின் ஏற்பாட்டில் “சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 10 மணியளவில் தாண்டவன்வெளி தேவாலயத்துக்கு முன்னால் சிவில் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலர் ஒன்றுதிரண்டனர்.
இதில் “வன்முறை எங்கு நடைபெற்றாலும் குற்றமே இணையத்திலும் கூட”, “பாதுகாப்பான இணையம் எங்கள் உரிமை”, “இணையத்தில் பெண்களை அடக்க முயலாதே நாங்கள் மீண்டெழுவோம்”, “இணைய வன்முறையை நிறுத்து”, “பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் உண்மையை அறிய ஒருபோதும் செயார் மற்றும் கொமன்ஸ் சமூக ஊடகங்களில் பண்ணாதே”, “இணையதள வன்முறையை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து நடைபவனியாக நகர பொலிஸ் நிலைய சுற்றுவட்டம் வரை சென்று அங்கிருந்து காந்தி பூங்காவை அடைந்து அங்கு பதாதையில் கையெழுத்து இட்ட பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


