நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றி மாறன் இணைந்து உருவாக்கி இருக்கும் புதுப்படம் அசுரன். மலையாள நடிகை மஞ்சு வாரியார், தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை மையமாக வைத்து படமாக எடுத்திருக்கின்றனர்.
தாணு, தன்னுடைய வி கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்தப் படபிடிப்பும் முடிந்து விட்டது. படம் ரிலீசாவதற்கு முந்தைய பணிகள் நடக்கின்றன.
இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் காட்சிகள், பாடல்களெல்லாம் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றன. இதையடுத்து, படத்தை அமெரிக்காவிலும் வெளியிட இருக்கின்றனர். அங்கு 110 தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று(செப்.,8) படத்தின் டிரைலரை வெளியிட்னர். 1.38 நிமிடம் ஓடும் டிரைலரில் படத்தில் உணர்ச்சியைத் தூண்டும் வசனங்கள் நிறைய இருக்கின்றன. அத்துடன் ரத்தமும், சதையுமான காட்சியமைப்புகள் நிறைய உள்ளன. ‛‛காடு இருந்தா எடுத்துகிடுவானுங்க; பணம் இருந்தா புடுங்கிக்கிடுவானுங்க. அதுனாலதான் படிக்கணும்னு சொல்றேன். படிப்பை யாரும் புடுங்கிக்க முடியாது. நமக்கு எது தேவையோ, அதை நாமதான் அடிச்சு புடுங்கணும் என்றெல்லாம் வசனங்கள் படத்தில் இடம் பெறுகின்றன.
தனுஷின் வேறுபட்ட நடிப்பு, உணர்ச்சிகரமான வசனங்கள், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளெல்லாம் இருக்கும் ஒரு கலவையான படமாக அசுரன் இருக்கும் என தெரிகிறது.