தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் மற்றும் எதிர் காலத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக ஜொலிக்க போகும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து மிரட்டி இருக்கும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் வித் கொமடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் த. செல்லையா தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மறைந்த கப்டன் விஜயகாந்த்தின் தூணைவியார் பிரேமலதா விஜயகாந்த், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்த விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ” படப்பிடிப்பிற்காக மதுரையில் உள்ள வைகை அணையின் உள் பகுதிக்கு சென்றேன். அங்கு மோட்டார் வைத்து கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா..? என ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அதைப்பற்றி விசாரித்த போது.. அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும். நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள்.
இந்த விடயம் தான் இந்தப் படத்திற்கான முதற் புள்ளி. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனிக்கு சென்றிருந்தபோது வைகை அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பார்வை எமக்குள் உணர்த்தியது தான் இப்படத்திற்கான திருப்புமுனை. இதனை அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் எக்சன் வித் கொமடி என்டர்டெய்னராக உருவாக்கி இருக்கிறோம் ” என்றார்.
