நடிகர் எம். சசிகுமார்- கலையரசன்- நடிகை ஆஷா சரத் ஆகியோர் அழுத்தமான வேடங்களில் தோன்றும் ‘நடு சென்டர்’ எனும் கூடை பந்தாட்ட விளையாட்டின் பின்னணியில் தயாராகி இருக்கும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வெளியாகிறது.
இயக்குநர் நரு. நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நடு சென்டர்’ எனும் இணைய தொடரில் சசிகுமார், கலையரசன் ,ஆஷா சரத் ஆகியோருடன் சூர்யா எஸ் கே, சூர்யா விஜய் சேதுபதி, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மது வசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா, அமலா ஜோசப் , சிவம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹெஸ்டின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் டிராமா ஜேனரிலான இந்த இணையத் தொடரை அக்வா புல்ஸ் கன்டென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அரபி ஆத்ரேயா -அவினாஷ் ஹரிஹரன்- செந்தில் வீராசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” பாடசாலையில் ‘ஏ ‘லெவல் படித்து வரும் மாணவரான பி கே- தேசிய அளவிலான கூடை பந்தாட்ட வீரர். தவறான நடத்தை காரணமாக பாடசாலையில் இருந்து நீக்கப்படுகிறார். வன்முறை குணம் மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் பிறிதொரு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்படுகிறார். அங்கு அவன் சக மாணவர்களுடன் இணைவதில் உளவியல் ரீதியிலான சிக்கல்கள் உண்டாகிறது. ஆனால் அவனுக்குள் இருக்கும் கூடை பந்தாட்ட திறனை அப்பாடசாலையின் துணை முதல்வர் கண்டறிந்து ஊக்குவிக்கிறார்.எதற்கும் அடங்காத அத்துமீறும் மாணவர்களை கொண்ட அந்த பாடசாலையில் ஒரு கூடை பந்தாட்ட அணியை கதையின் நாயகன் உருவாக்குகிறான். அது அவனது வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை இந்த ‘நடு சென்டர் ‘எனும் இணைய தொடரில் விவரித்திருக்கிறேன்” என்றார்.
ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் ‘நடு சென்டர்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் சசிகுமார் – சூர்யா விஜய் சேதுபதி ஆகியோர் தோன்றுவதால் ஏனைய ரசிகர்களுக்கும் இந்த இணைய தொடர் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

