நாட்டில் 2,763 கிராமசேவகர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என பிரதமரும் பொது நிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது சஞ்சீவ எதிரிமான எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் 14,022 கிராம சேவகர் காரியாலயங்கள் உள்ளன. இதில் 2,763 கிராமசேவகர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2230 இல் உள்ள அறிவிப்பில், இலங்கைப் பரீட்சை திணைக்களம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்களுக்காக தற்போது அரசாங்க சேவையில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சை திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரீட்சையை நடத்தவுள்ளது. இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன. அதன்படி நேர்முகப்பரீட்சை மூலம் கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.