போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று கூறி தமிழக அரசியலை உசுப்பேற்றிவிட்டு, தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டார் ரஜினிகாந்த். அன்றிலிருந்து அரசியல் பரபரப்பு குறையவே இல்லை. இடையில் சடாரென்று பிக் பாஸ், அரசியல் விமர்சனம் என தன் பங்குக்கு வேலையை ஆரம்பித்தார் கமல் ஹாஸன்.
ஆரம்பத்தில் கமலெல்லாம் அரசியலுக்கு வருவதாவது, அவர் சும்மா ட்விட்டர்ல பூச்சாண்டி காட்டுவதோடு நின்றுவிடுவார் என்றார்கள். ஆனால் ட்விட்டர் தாண்டி நிகழ்ச்சிகளிலும் வெளிப்படையான அரசியல் பேசினார் கமல்.
இப்போது கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டார். அவ்வளவுதான்… கடந்த இரு நாட்களாக வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர், யுட்யூப் என கருத்து சொல்ல இலவசமாகக் கிடைத்த அத்தனை தளங்களிலும் கமல் அரசியல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் கலகலக்கின்றன.
கமலின் இந்த அறிவிப்பை சீரியஸாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா, என தவிக்கின்றனர் முழு நேர அரசியல்வாதிகள். இன்னொரு பக்கம், எதற்கும் இருக்கட்டும் என்று சில இரண்டாம் கட்ட தலைவர்கள் கமல் ஹாஸனை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்களாம்