ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகின்றது.
இணைந்து கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பமாக இருக்கும் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுக்கு அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
அதனால்தான், இணைந்து கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கட்சியின் ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைவமையில் சுகததாச உள்ளக அரங்கில் கொண்டாடப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நாட்டை கட்டியெழுப்பு அனைவரையும் ஒன்றிணையுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றார்.
1948ஆம் ஆண்டு நாட்டை கட்டியெழுப்ப டி.எஸ். சேனாநாயக்க அன்று அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்ததுபாேன்று எமது கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றாக பயணிக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
1953இல் இந்த நாட்டில் பாரிய ஹர்த்தால் ஒன்று இடம்பெற்றது. இதன்போது டட்லி சேனாநாயக்க நாட்டின் தலைவராக இருந்தார். ஒரு கிலாே அரிசி 35சதத்தில் இருந்து 76சதத்துக்கு அதிகரித்த காரணத்தினாலே இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தால் நடத்தியது.
இதன் விளைவாக 1956இல் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தது. அதனைத்தொடர்ந்து டட்லி சேனாநாயக்க தோல்வியை ஏற்றுக்கொண்டு, கட்சியின் தலைமையில் இருந்து விலகியதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால் 1958ஆகும் போது நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டபோது, டட்லி சேனாநாயக்கவை நாட்டு மக்கள் மீண்டும் அரசியலுக்கு கொண்டுவந்து, நாட்டின் தலைமைத்துவத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். அதன் பயனாக 1960/65 காலப்பகுதியில் மீண்டும் அரசாங்கம் அமைக்க டட்லி சேனாநாயக்க நடவடிக்கை எடுத்தார்.
அதேபோன்று 2020இல் நாட்டு மக்கள் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியை நிராகரித்தனர். என்றாலும் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் 2022இல் நாட்டின் தலைவரானார்.
நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டை கட்டியெழுப்பு முடியுமான தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் நாட்டுக்காக பணி செய்யாமல் பலவீனமடைந்து தோல்வியடைந்த கட்சியல்ல. நாட்டின் அனைத்து துறைகளையும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அவ்வாறு இருந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு, மக்களை ஏமாற்றியே ஐக்கிய தேசிய கட்சியை தேர்தலில் தோல்வியடையச்செய்திருக்கின்றது.
கடந்த தேர்தர் தோல்வியும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சியினால் தெரிவிக்கப்பட்டு மக்களை ஏமாற்றியதனாலே இடம்பெற்றது என்பதை தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே இன்று இடம்பெற இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது ஆண்டு நிறைவு விழா, வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பமாக அமையும். அதனாலே இணைந்து கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது என்றார்.

