தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ டீசல்’ எனும் திரைப்படம் – எரிபொருளின் விலை உயர்வுக்கு பின்னணியில் உள்ள அரசியலை உரத்து பேசும் படைப்பாக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகரும், இயக்குநருமான சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள’ டீசல்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ரிஷி ரித்விக், தீனா, ஜார்ஜ், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் – எம். எஸ். பிரபு ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜூலு மணிகண்டன் தயாரித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள உணவகம் ஒன்றில் பசியாறிக் கொண்டிருக்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த எரிபொருள் வாகனம் ஒன்றில் இருந்து சிறுவர்கள் ‘டீசலை’ திருடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது தான் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான நிழல் உலகம் பற்றி தெரிய வந்தது.
இது எந்த அளவிற்கு பொதுமக்களை பாதிக்கிறது என்பதை தொடர் முயற்சியில் தெரிந்து கொண்ட பிறகு படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். அத்துடன் ‘டீசல்’ எனும் எரிபொருளின் விலை உயர்வின் பின்னணியில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. இதனையும் இந்த படைப்பில் விவரித்திருக்கிறோம்” என்றார்.