பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எப்-16 போர் விமானங்களில் எதுவும் மாயமாகவில்லை என அமெரிக்கா நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்களை தீவிரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த கடந்த 26ம் தேதி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக காஷ்மீரில் குண்டு வீச பாகிஸ்தான் போர் விமானங்கள் ஊடுருவின. இவற்றை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன.
இந்த சண்டையில் பாகிஸ்தான், அமெரிக்கா வழங்கிய எப்-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக இந்திய விமானப்படை கூறியது. அதற்கு ஆதாரமாக எப்-16 போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் அம்ராம் ஏவுகணையின் பாகங்களையும் இந்திய விமானப்படை ஆதாரமாக காட்டியது. மேலும், ஒரு எப்-16 ரக போர் விமானத்தை விமானி அபினந்தன் சுட்டு வீழத்தினார் எனவும் இந்திய விமானப்படை கூறியது.
ஆனால், எப்-16 போர் விமானங்களை பயன்படுத்தவே இல்லை என்றும், எப்-16 ரக விமானங்கள் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் கூறியது. பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியபோது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட விமானங்களை அமெரிக்கா எப்போது வேண்டுமானலும் சோதனை செய்யலாம்.
அதன்படி, எப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுக்க வரும்படி அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்ததாகவும், இந்த சோதனையில் அமெரிக்கா வழங்கிய அனைத்து எப்-16 போர் விமானங்களையும் பாகிஸ்தான் காட்டியதாகவும் அமெரிக்காவின் ‘தி பாரின் பாலிசி’ என்ற இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது, இந்திய விமானப்படை தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக உள்ளது.சுட்டு வீழ்த்தியது உண்மைபாகிஸ்தானில் எப்-16 போர் விமானம் எதுவும் மாயமாகவில்லை என அமெரிக்க இதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, இந்திய விமானப்படை நேற்று விடுத்த அறிக்கையில், ‘கடந்த பிப்ரவரி 27ம் தேதி, பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை இந்திய விமானப்படையின் மிக்-21 பைசன் ரக விமானம், நவுசேரா பகுதியில் சுட்டு வீழ்த்தியது’ என தெரிவித்துள்ளது.

