விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார்.
இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும்.
சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.
சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 – 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார்.
ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார்.
லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 – 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார்.
இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 – 4, 6 – 4, 6 – 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
