இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிக்கும் குறிக்கோளுடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டி எழுப்பும்’ நிதியத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) 30 கோடி ரூபாவை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றுக் குழுவினரின் ஆலோசனைக்கு அமைய இந்த நிதி உதவியை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மில்லியன் கணக்கான இலங்கையர்களால் நேசிக்கப்படும் தேசிய கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆழமான பொறுப்புணர்வை இந்த உதவி பிரதிபலிக்கிறது.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதிலும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அத்தியாவசிய பொது சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதிலும் இந்த பங்களிப்பு அரசாங்கத்திற்கு உதவும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நம்புகிறது.
மேலும், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்தும் நாட்டிற்கு துணை நிற்கும் எனவும் அவசியம் ஏற்படும் போதெல்லாம் அதன் ஆதரவை வழங்கும் எனவும் அதன் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்றுக் குழுவினர் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
