இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இரு தரப்பு அனுபவம் மற்றும் திறன்களை முழுமையாகப் பகிர்ந்துக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுடில்லியில்இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தன.
இதன்போதே, இருதரப்பு பயிற்சிகளை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, இந்தியப் பெருங்கடலில் தங்களது செல்வாக்கை விரிவுப்படுத்த சீனா தொடர்ந்தும் முயன்று வரும் நிலையில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.