Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்!

July 19, 2019
in News, Politics, World
0

“முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடி வருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.”

– இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்.

“இந்த நாட்டை அமைதியற்ற சூழலில் வைத்திருக்க எண்ணும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கு இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிதீவிர பிரசாரங்கள், கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையடுத்து ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளைத் துறந்தீர்கள். இந்தநிலையில், மீண்டும் அந்தப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி என்ன?

பதில்:- உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் நாட்டில் முஸ்லிம் – சிங்கள கலவரத்தை தூண்டுவதற்கு இனவாதிகள் முயற்சி எடுத்தபோது,பௌத்த தேரரொருவர் பௌத்த தர்மத்துக்கு மாறாக உண்ணாவிரதம் இருந்து எங்களை (முஸ்லிம் அமைச்சர்களை) அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்திய அதேவேளை, அந்தத் தேரருடைய அச்சுறுத்தலுக்குப் பக்கபலமாக சிறையிலிருந்து வெளியே வந்த தேரர் ஒருவர் பதவிகளிலிருந்து வெளியேறாவிட்டால் பாத யாத்திரை மேற்கொண்டு நாட்டில் கலவரம் ஒன்றை உருவாக்குவோம் என்று அச்சுறுத்தியபோது,இனங்களுக்கிடையில் முரண்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நாட்டினுடைய நலனையும் கருத்தில்கொண்டு நாங்கள்(முஸ்லிம் அமைச்சர்கள்) அன்று பதவிகளிலிருந்து வெளியேறுவது என ஒட்டுமொத்த முஸ்லிம் தலைவர்களும் முடிவெடுத்து விலகினோம்.

அச்சமயத்தில் என் மீதும் இரண்டு ஆளுநர்கள் மீதும் பல தரப்புகளால் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், பயங்கரவாத செயற்பாடுகளுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பொலிஸ்மா அதிபர் சபாநாயகருக்கு அறிவித்திருக்கின்றார். அதேபோல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு எங்களை அழைத்தபோது, அங்கு சென்று தெளிவான பதிலை வழங்கியிருக்கின்றேன்.

அந்த அடிப்படையில், நாங்கள் பதவிகளை மீண்டும் ஏற்பதா? இல்லையா? என்று முடிவெடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் பௌசி தலைமையில் கூடி வேளையில், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக மீண்டும் பதவிகளைப் பொறுப்பேற்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது. அனைவரினதும் ஏகோபித்த முடிவாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கேற்ப விரைவில் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்போம்.

கேள்வி:- நீங்கள் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றால் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று அத்துரலிய ரத்தன தேரர் எச்சரித்திருக்கின்றாரே?

பதில்:- அவர் விரும்புகின்ற நேரத்தில், அவர் விரும்புகின்ற ஒருவர்தான் முஸ்லிம் சமுதாயத்தில் அமைச்சராக இருக்கவேண்டும் என்று அவருடைய சிந்தனைக்கு நாங்கள் அடிபணிவோமாக இருந்தால், அது அவருடைய இனவாத சிந்தனைக்கு நாங்கள் அடிபணித்தவர்களாகி விடுவோம்.

நாங்கள் தற்போது எடுத்திருக்கின்ற முடிவு என்பது இனவாதிகளின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவே இருக்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவர் இவர்தான் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற இனவாதிகளின் விருப்பத்தை எங்களால் நிறைவேற்ற முடியாது. அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதாக இருந்தால் ஒட்டுமொத்தமாகத்தான் ஏற்போம்.

கேள்வி:- நாட்டில் சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் கலவரம் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் நாட்டின் நலன் கருதியும்தான் அமைச்சுப் பதவிகளைத் துறந்ததாகக் கூறினீர்கள். இன்று அந்த அச்சங்கள் நீங்கிவிட்டதா?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் அனைத்துவிதமான குற்றச்சாட்டுக்களையும் திணிக்கப் பார்த்தார்கள். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலுடன் முஸ்லிம் சமூகத்துக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது இன்று நிரூபணமாகியிருக்கின்றது.

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறப் போகின்றது என்பதை ஏற்கனவே அறிந்திருந்தபோதும், அதனைத் தடுக்காமல் இருந்தது அரசின் தவறு என்பதை முழு உலகமும் இன்று அறிந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் முஸ்லிம் மக்கள் நிரபராதிகள்; முஸ்லிம் தலைவர்கள் நிரபராதிகள் என்பது முழு உலகுக்கும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை நிரூபித்திவிட்டுத்தான் நாங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

கேள்வி:- அரசிலிருக்கின்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும் பயங்கரவாத எச்சரிக்கை தொடர்பாகத் தெரிந்திருக்கின்றது. உங்களுக்கு அது தொடர்பாகத் தெரிந்திருக்கவில்லையா?

பதில்:- உண்மையிலேயே சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக இது தொடர்பாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. சம்பவம் நிகழ்ந்ததன் பின்னர்தான் இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று இருந்திருக்கின்றது என்பது தொடர்பில் அறிந்தோம்.

கேள்வி:- ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமைகளைக் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பதவிகளைத் துறந்த அதேவேளை, அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டீர்கள். இந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் தொடருமா?

பதில்:- பல கட்சிகளைச் சார்ந்த, வெவ்வேறு கொள்கைகளையுடைய தரப்பினர் சமுதாயத்துக்காக, இன ஒற்றுமைக்காக, நாட்டின் நலனுக்காக ஒற்றுமைப்பட்டோம். இந்த ஒற்றுமை எதிர்காலத்திலும் தொடரும்.

அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நாங்கள் ஒன்றிணையவில்லை. மக்கள் வாக்குகளால் அரசியலுக்கு வந்த நாங்கள், எங்களுடைய அரசியல் பலத்தை சமூக நலனுக்காக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இக்கட்டான நிலையில் நாடு இருந்தபோது பெரும்பான்மை இனத்தையும் முஸ்லிம் இனத்தையும் மோதவிட்டு அதனூடாக முஸ்லிம்களுடைய பொருளாதாரம், முஸ்லிம்களுடைய எதிர்காலம், முஸ்லிம்களுடைய இருப்பு என அனைத்துக்கும் ஆபத்து வந்தபோதுதான் நாங்கள் ஒன்றுபட்டோம். அன்றிலிருந்து இன்றுவரை பலவிடயங்களில் ஒற்றுமையாக இருந்து அவற்றுக்கு முகம்கொடுத்தோம். முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக ஒற்றுமையாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலும் அரசியலுக்கு அப்பால், சமூக நலனை மையமாக வைத்து மக்களின் நலனுக்காக ஒற்றுமையாகச் செயற்படுவோம்.

கேள்வி:- நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பிரிந்துதான் செயற்படுகின்றார்கள். இந்தநிலையில், அரசியலுக்கு அப்பால், சிறுபான்மையின மக்களுடைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சிறுபான்மையினத் தலைவர்கள் ஒருகுடையின் கீழ் இயங்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:- சிறுபான்மை கட்சிகளுக்கிடையில் வெவ்வேறு கொள்கைகள் இருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் எவ்வாறு ஒன்றுபட்டுச் செயற்பட்டோமோ, அதேபோன்று எதிர்காலத்திலும் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினருக்கு இருக்கின்ற பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு செயற்படுவது காலத்தின் தேவை என்று நான் கருதுகின்றேன்.

அந்த அடிப்படையில் சம்பந்தன் ஐயா,சுரேஷ் பிரேமச்சந்திரன், மனோ கணேசன், தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் உட்பட தமிழ் – முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போமானால் அது இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினத்துக்கான ஒரு பாதுகாப்பு அரணாக அமையும் என நான் நம்புகின்றேன்.

கேள்வி:- ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் சிங்களத் தீவிரவாத அமைப்புகள் சிறுபான்மையினத்துக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, சிறுபான்மையினருக்கு இந்த நாடு அச்சுறுத்தலான நாடு என்ற பார்வை முன்னைய காலத்தையும் விட ஓங்கி நிற்கின்றது. இந்த அச்சுறுத்தலைப் போக்குவதற்கு நீங்கள் (ரிஷாத் பதியுதீன்) உட்பட சிறுபான்மைத் தலைவர்கள் எவ்வாறு செயற்படப் போகின்றீர்கள்?

பதில்:- பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த அடிப்படைவாத அமைப்புகள் சுதந்திரத்துக்குப் பின்னரான காலம் தொட்டு ஒவ்வொரு வகையான அச்சுறுத்தல்களை சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துக்கொண்டுதான் வருகின்றார்கள். இவர்களுடைய இந்தச் செயற்பாடுகளை சிங்கள சமூகம் அங்கீகரித்த வரலாறு கிடையாது.

இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபான்மை சமூகத்துக்கும் இடையில் எப்போதும் ஒரு முறுகல், பிளவு இருப்பது போன்று காட்டி, அதனூடாக தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருவது காலாகாலமாக நடந்து வருகின்றது.

இவர்களால் இந்த நாட்டில் எதனையும் செய்யமுடியாது. ஆனால், இந்த நாட்டைச் சீரழிக்கின்ற, இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைச் சீரழிக்கின்ற, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குலைக்கின்ற, உயிராபத்தை ஏற்படுத்துகின்ற முகவர்களாகவே இவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்கள் இந்த நாட்டினுடைய சட்டதிட்டங்களுக்கு முரணாகப் பேசுகின்றவர்கள், செயற்படுகின்றவர்கள்.

இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறுபான்மைச் சமூகத்தினுடைய பொறுப்பல்ல. அது ஆட்சியாளர்களுடைய பொறுப்பு. இந்த நாட்டினுடைய சட்டம் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்தாலும், ஏனைய மதத்தினருக்கும் அவர்களுடைய மதத்தைப் பேணி நடத்துகின்ற அனைத்து உரிமையையும் வழங்கியிருக்கின்றது.

அரசமைப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அங்கீகாரங்களைக்கூட சிறுபான்மைச் சமூகம் அனுபவிப்பதை விரும்பாத சக்திகள்தான் இவர்கள். சிங்கள மக்கள் இவ்வாறான இனவாதிகளுடைய செயற்பாடுகளை அங்கீகரிப்பதில்லை.

அந்த அடிப்படையில் இந்தச் சக்திகளுடைய எதிர்பார்ப்பு இந்த நாட்டை ஸ்திரமற்ற நிலையில் வைத்திருப்பதாகும். இவர்களைச் சக்தியொன்று இயக்கிக்கொண்டிருக்கின்றது. எனவே, சிறுபான்மை சமூகங்கள் இந்த விடயத்தில் தெளிவாக, விழிப்பாக, புத்திசாதுரியமாக இருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

கேள்வி:- உங்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களின் பின்னணி என்ன?

பதில்:- கடந்த ஒக்டோபரில் நடந்த 52 நாள் அரசியல் சதிப்புரட்சிக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் என் மீதான அதிருப்திக்குக் காரணம். அரசை விட்டு வெளியேறி சதிப்புரட்சிக்கு நான் ஆதரவளிப்பேன் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பை முறியடித்ததனால் என் மீது அதிகளவான பழிவாங்கல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் எங்கள் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சம்பவங்களுக்கு எதிராக நாங்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்றும், எதிர்த்து நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இனவாத சக்திகள் எதிர்பார்க்கின்றார்கள்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்பது அவர்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கின்றது. ஆனால், நான் உடனுக்குடன் அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பதனால் என் மீது அவர்களுக்கு விரோதம்.இ வைதான் என் மீதான பகைமைக்குக் காரணம்.

கேள்வி:- சிறுபான்மை இனங்கள் ஒற்றுமைப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்ற நிலையில், அந்த இணைவு சம்பந்தமான பேச்சுக்கள் வருகின்றபோது வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றிய பேச்சும் பேசப்படுவது வழமை. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண மக்களுடைய விருப்பு வெறுப்புகளை முதலில் அறிய வேண்டும். வடக்கு, கிழக்கு இணைய வேண்டுமாகவிருந்தால் கிழக்கு மாகாண மக்கள் அதனை விரும்ப வேண்டும். எனவே, அவர்களுடைய நிலைப்பாட்டை அறிந்துதான் அதனைச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களுடைய விருப்புக்கு மாறாகச் செய்ய முற்படும்போது அது வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும். எனவே, அவர்களுடைய விருப்பை அறிந்த பின்னர்தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:- நீண்டகாலமாக இருந்து வருகின்ற கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- பேச்சுவார்த்தை ஊடாக அந்த விடயத்துக்குத் தீர்வு காணப்படவேண்டும். தற்போது அந்த விவகாரம் சூடு பிடித்திருக்கின்றது. இரண்டு தரப்பும் திருப்தி அடையக்கூடிய வகையில் இந்த விடயத்துக்குத் தீர்வு காணப்படவேண்டுமே ஒழிய, ஒரு தரப்பு வெற்றிபெற்றதாகவும், ஒரு தரப்பு தோல்வியடைந்ததாகவும் இருக்கக்கூடாது.

இவ்விரு இனங்களும் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒரு இனமே. அந்த அடிப்படையில், தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கின்ற சிறுசிறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி பெரும்பான்மைப் பேரினவாதிகள் சிறுபான்மையினத்தை எவ்வாறு நசுக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் அதற்க்கு விலை போய்விடாமல், இரண்டு தரப்பிலுள்ள புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு, பேசி ஒரு நியாயமான தீர்வை அவசரமாக எடுக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.

கேள்வி:- சிறுபான்மை சமூகத்தினுடைய முழுமையான ஆதரவுடன் 2015 இல் ஏற்படுத்தியிருந்த ஆட்சி மாற்றம் இறுதித் தருணத்துக்கு வந்திருக்கின்றது. நீங்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடந்தேறியிருக்கின்றதா?

பதில்:- இந்த ஆட்சியினுடைய பின்னடைவுக்குக் காரணம் ஜனாதிபதி ஒரு கட்சியையும் பிரதமர் ஒரு கட்சியையும் வைத்துக்கொண்டு அதிகாரம் பிரிந்து நிற்பதாகும். அந்த அடிப்படையில் நாங்கள் எதிர்பார்த்த இலக்கை எங்களால் அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த அரசுடன் ஒப்பிடும்போது இந்த அரசின் உருவாக்கத்தில் சிறுபான்மைக் கட்சிகளுடைய பெருமளவான ஒத்துழைப்பு இருந்திருக்கின்றது. அதேபோல், தமிழ், மலையக, முஸ்லிம் கட்சிகளுடைய ஒத்துழைப்போடுதான் இந்த அரசு நகர்ந்துகொண்டிருக்கிறது.

சிறுபான்மை சமூகங்களின் வெறுப்பை சம்பாதித்தால் அரசைக் கொண்டு நடத்த முடியாது என்ற அச்சமும் இந்த அரசுக்கு இருக்கின்றது. ஆனாலும், நாங்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் முழுமையாகப் பூர்த்தியடையவில்லை என்ற வருத்தம் எங்களிடம் இருக்கின்றது.

இந்த அரசில் சிறுபான்மைக் கட்சிகள் அதிகளவில் இருப்பதனால், ஒப்பீட்டு ரீதியில் கடந்த அரசைவிட இந்த அரசில் எங்களுடைய விடயங்களில் சிலவற்றை செய்துமுடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

எனினும், கடந்த அசை வீழ்த்தி புதியதொரு அரசைக் கொண்டு வந்தபோதிலும்கூட பேரினவாத சக்திகளின் அட்டகாசங்களை அடக்குகின்ற விடயத்தில் நாங்கள் திருப்திப்படக்கூடிய வகையில் இந்த அரசு செயற்படவில்லை என்ற குறை இருக்கிறன்து.

கேள்வி:- மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் வருவதை விரும்புகின்றீர்களா? இல்லை ஆட்சியில் இருக்கின்ற அரசு வருவதே பொருத்தம் எனக் கருதுகிறீர்களா?

பதில்:- அது தொடர்பில் தற்போது பேசுவது தகுந்த தருணம் என நான் கருதவில்லை. உரிய நேரம் வரும்போது அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்போம்.

கேள்வி:- முஸ்லிம் மக்களின் தனித்துவத்துக்கு சவால் விடுக்கும் சம்பவங்கள் பல அரங்கேறுகின்றன. குறிப்பாக அபாயா விவகாரம், அரபுக்கல்லூரிகளுக்கு எதிரான பிரசாரங்கள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். இவை தொடர்பில் நீங்கள் (ரிஷாத் பதியுதீன்) உட்பட முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- இந்த விடயங்கள் தொடர்பாக எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக எங்களுடைய நியாயத்துக்காக நாங்கள் போராடி வருகின்றோம். இந்த நாட்டினுடைய அரசமைப்பில் ஒவ்வொரு மதத்தினரினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் எங்களுடைய சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களுக்கு எங்களுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்துவோம். முடியாவிட்டால் அரசமைப்புக்கு உட்பட்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம். அதேபோல் தேவைப்பட்டால் ஐ.நா. வரை செல்ல வேண்டுமென்றாலும் செல்வோம்.

கேள்வி:- மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு முகம்கொடுக்கவிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கின்றபோது அந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சி ரீதியாக வெவ்வேறு முடிவுகளாகவும் இருக்கலாம். ஒரே முடிவாகவும் இருக்கலாம். அந்த அடிப்படையில் தேர்தல் வருகின்றபோதுதான் அந்தச் சூழ்நிலையில் ஏற்படுகின்ற நிலைவரங்களை வைத்துக்கொண்டு முடிவுகளை எடுக்க முடியும். அதற்கேற்ப எந்தத் தேர்தல் முதலில் வருகின்றதோ, அவ்வேளையில் எங்களுடைய முடிவை அறிவிப்போம். இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன் .

Previous Post

ஏரிகளை நீங்களும் தூர் வாரலாம்: 10 நிபந்தனையுடன் அனுமதி தருது அரசு

Next Post

கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்!

Next Post

கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures