யாழ்.போதனா மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்ட இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் மட்டுவிலைச் சேர்ந்த சிதம்பரநாதன் முகுந்தனுக்குத் தென்மராட்சி பிரதேச மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு நிகழ்வு , நேற்று சாவகச்சேரி சிவன் கோவில் சாலையில் உள்ள தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவரின் கல்லூரித் தோழனும் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை பிரதி அதிபருமான செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதேச மக்கள் ஒன்றிணைந்து சாவகச்சேரி சிவன் கோவிலிலிருந்து விழா நாயகன் தம்பதி மற்றும் அவரது தாயார் ஆகியோரை ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
நிகழ்வின் வரவேற்புரையினை சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரனும் , ஆசியுரையினை சாவகச்சேரி முத்துமாரி அம்பாள் கோவில் முதன்மைக் குரு சிவசிறி க.வீரபத்திரக் குருக்கள் சாவகச்சேரி கத்தோலிக்க பங்குத் தந்தை அருட்பணி றெக்ஸ் சௌந்தரா அடிகளாரும் நிகழ்த்தினர்.
முதன்மை உரையினை வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்..
பாராட்டுரைகளை வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு, யாழ்.போதனா மருத்துவமனை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் சு.பிரேமகிருஷ்ணா, சாவகச்சேரி மருத்துவமனை பொறுப்பதிகாரி ப.அச்சுதன் , யாழ்.போதனா மருத்துவமனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை மேற்கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த சரண்குமார் உட்பட பலர் உரையாற்றினர்.
மருத்துவ நிபுணரின் சேவையினைப் பாராட்டி பிரதேச மக்களால் ‘முகுந்தம்’ என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றது.