அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அது 14 நாட்களுக்குள் பாராளுமன்றில் நிறைவேற்றப்படாவிட்டால் இரத்தாகும்.
இந்நிலையில், அவசர சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விவாதம் இன்றைய தினம் மாலை வரை இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து அவசரகால சட்டம் இன்று மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இதற்கமைவாக, அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
