மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு செல்வதற்கு தமக்கான வாகனம் இல்லாததால், அதனை வழங்கக் கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் பிரதேச செயலகத்துக்குச் சென்று இன்று (16) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை பிரதேச சபைகள் காலம் முடிவுற்று கலைக்கப்பட்டதையடுத்து, பிரதேச செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் பிரதேச சபைகள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற புதிய ஆளுநர் பயன்படுத்தாத வாகனங்கள் தொடர்பாக அறியத்தரும்படி பிரதேச சபைகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, வாகனங்கள் ஆளநரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனையடுத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டு பிரதேச சபை தவிசாளர்கள் ஆட்சியை பெறுப்பேற்றதையடுத்து, மீண்டும் வாகனங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இருந்தபோதும் பிரதேச சபை தவிசாளர்களுக்கான வாகனம் இல்லாததால் அவர்கள் தமது சேவையைச் செய்ய முடியாமல், பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.
எனவே, பிரதேச சபைகளில் இருந்து எடுத்துச் சென்ற வாகனங்களை மீண்டும் வழங்குமாறு கோரி, செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளீதரன், வாழைச்சேனை பிரதேச சபையின் சு.சுதாகரன் ஆகிய இரு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் இன்று இடம்பெறவிருந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக செங்கலடி பிரதேச சபையின் கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் 16 கிலோ மீற்றர் தூரம் பயணித்து மட்டக்களப்பு கச்சேரியை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த உழவு இயந்திரத்தை கச்சேரி வளாகத்தில் உட்செல்ல விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி, சில நிமிடங்களின் பின்னரே உள்ளே செல்ல அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கையில், நாங்கள் ஒருபோதும் பிரதேச சபைகளின் தவிசாளர்களின் வாகனங்களை பெறவில்லை. இவர்கள் ஊடகங்களுக்கு படம் காட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் வந்துள்ளனர். அத்துடன் இவர்கள் கழிவு அகற்றும் வாகனத்தை அந்த வேலைக்கு செல்ல விடாமல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றார்.


