அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஆறு பேரின் சொத்துக்கள் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் விசாரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
சொத்து விபரங்களில் சந்தேகம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டி வருகிறோம்.
குறிப்பிட்ட ஆறு அமைச்சர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் தீவிர சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இது தொடர்பில் விரைவில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க தீர்மானித்தோம்.

குறித்த அமைச்சர்கள் தொழில் எதுவும் புரியாமல், வியாபாரத்தில் ஈடுபடாமல், முழு நேர அரசியலில் ஈடுபட்டு இவ்வளவு சொத்துக்களை ஈட்டியது எப்படி? என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இந்த தகவல்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வோம்” என தெரிவித்தார்.