அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன் – மை ஸ்டுடியோஸ்.
நடிகர்கள் : உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பவன், தயா பன்னீர் செல்வம், பிரபு சாலமன், சுபத்ரா மற்றும் பலர்.
இயக்கம் : பிரபு ஸ்ரீநிவாஸ்
மதிப்பீடு: 2/ 5
மூன்றாண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் உதயா மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. கன்னட திரையுலகில் வெற்றி பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகி இருப்பதால் குறைந்த பட்ச எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பட மாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவத்தை ‘அக்யூஸ்ட்’ வழங்கியது என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தில் செயல்படும் பிரபலமான அரசியல் கட்சி ஒன்றின் மாவட்ட தலைவரான குணசேகர் ( பவன்) கொல்லப்படுகிறார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் குற்றவாளியான கணக்கு ( உதயா) என்கிற கனக சுப்புரத்தினத்தை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்கிறார்கள். நீதிமன்ற மற்றும் காவல்துறை நடைமுறையின் படி கைதி உடன் காவலர்களும் செல்ல வேண்டும் என்பதால்.. அந்தப் பணிக்கு காவல்துறை உயர் அதிகாரியின் வீட்டில் பணியாற்றும் காவலரான வேந்தன் ( அஜ்மல்) தெரிவு செய்யப்பட்டு, குற்றவாளியுடன் அனுப்பப்படுகிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன், கொலை செய்ய வேண்டும் என ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருவர் திட்டமிடுகிறார். இதனால் கைதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் பல அசாதாரமான சூழல்கள் உருவாகிறது. இதன் அசலான பின்னணி என்ன? குற்றவாளியான கணக்கு செய்த குற்றம் என்ன? குற்றவாளியை கொலை செய்வதற்காக துரத்தும் கும்பலை இயக்குவது யார் ? குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டாரா? இல்லையா? போன்ற விடயங்களை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
நான்லீனியர் பாணியில் திரைக்கதை விவரிக்கப்பட்டிருந்தாலும்… எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும்… கதாபாத்திரங்களும் , அவர்களின் செயற்கையான நடிப்பும்.. ரசிகர்களை வதைக்கிறது.
சிறைச்சாலையில் இருந்து புறப்படும் போது காவல்துறை வாகனத்தில் பழுது ஏற்படுவது… பிறகு அரசு போக்குவரத்து துறை பேருந்தில் பயணிப்பது… பிறகு துவி சக்கர வாகனத்தில் பயணிப்பது.. பிறகு விடுதியில் தங்குவது.. பிறகு மறைமுகமான பயணம் மேற்கொள்வது.. என ஒரு கைதியை நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக காவல்துறை எடுக்கும் முயற்சி பாராட்டக்கூடியதாக இருந்தாலும்… இதன் பின்னணியில் நடைபெறும் சதியை தெரிந்து கொள்ளும்போது ஆச்சரியத்திற்கு பதிலாக ‘அட…..!’ என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.
கணக்கு என்ற கொலை குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் உதயாவின் நடிப்பில் துள்ளல் இருந்தாலும்.. அவை பொருத்தமில்லாமல் துருத்திக் கொண்டு நிற்பதால் அளவாகத்தான் சில இடங்களில் மட்டும் ரசிக்க முடிகிறது.
வேந்தன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜ்மல் பல இடங்களில் மிகையான நடிப்பால் கடுப்பேத்துகிறார். ஆனாலும் காதலியுடன் கைபேசியில் கொஞ்சம் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.
மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஜான்விகா அழகாக இருந்தாலும்.. இளமையுடன் இருந்தாலும்.. கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ராம நாயுடு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு திரைக்கதைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும்.. சில இடங்களில் அவர் உதிர்க்கும் ‘ஒன் லைனர்கள்’ ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர் – படத்தை ஓரளவுக்கு தாங்கி இருக்கிறார்கள்.
அக்யூஸ்ட் – டைம் வேஸ்ட்