விடுதலைக்கு மறுப்பு: தமிழக அரசின் முடிவு வருத்தமளிக்கிறது!- நளினி!
ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசு விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நளினியை விடுவிக்க முடியாது’ என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்து தனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 25 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘ஆயுள் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நளினியை விடுவிக்க முடியாது. அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என்று கூறியிருந்தது.
இது நளினி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி நளினியுடன் கலந்தாலோசிக்க, அவரது வழக்கறிஞர் புகழேந்தி வேலுார் பெண்கள் சிறைக்கு வந்திருந்தார்.
நளினியை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ” நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவிற்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்தது தனக்கு மனவேதனை அளித்ததாக நளினி கூறினார்.
வரும் திங்கட்கிழமை இவ்வழக்கின் இறுதி விசாரணையின் போது சட்டப் பிரிவு 94 ஐ பயன்படுத்தி வாதிடுவோம்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி மோகன்ராஜ், தனது முகநூலில் உண்மையான சாந்தன் இறந்து விட்டதாக கூறியிருப்பதை வைத்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, உண்மையான சாந்தனை கண்டுபிடிக்க கோரி ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபடும். என்றார்