வவுனியா, இளம் கண்டுபிடிப்பாளர் ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரி மிரட்டல்!
வவுனியாவைச் சேர்ந்த தமிழரான இளம் கண்டுபிடிப்பாளர் என். ஜாக்சனிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரி மூவர் கடும் தொனியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உலகமே என்னைப் பாராட்டும் நிலையில் இனந்தெரியாத மூவர் மட்டும் என்னை அச்சுறுத்துவதுடன் என்னைப் பற்றி தவறான வதந்திகளை ஏற்படுத்தி பணம் கேட்டு அச்சுறுத்துகின்றனர்.
எனது கண்டுபிடிப்புக்கு கிடைத்த (200 கோடி ரூபாய்) பணத்தில் சரிபாதி பங்கு தருமாறு கப்பம் கோருகின்றனர் என்றும் ஆதங்கப்பட்டுள்ளார்.
இளம் கண்டுபிடிப்பாளரான ஜாக்சன் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
என்னிடம் 100 கோடி ரூபாய் கப்பம் கோரியவர்கள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன்.
இவ்வாறு கப்பம் கோரி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இனந்தெரியாத மாற்று குழுக்களை அடக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக இதில் தலையிட்டு மாற்று குழுக்களை இலங்கையில் முற்றாக ஒழிக்க வேண்டும்.
ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை வலம்புரிப் பத்திரிகை ஊடாக முன்வைக்கின்றேன்.என்னைப் போன்றவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் என்னை அச்சுறுத்துபவர்கள் இலங்கையன் என்று வேண்டாம்.
என்னை அச்சுறுத்துபவர்கள் நான் தங்கள் இனத்தவன் என்றாவது சிந்தித்து செயற்பட்டார்களா? அதுவும் இல்லை.
தங்கள் மாகாணத்தவன் என்றாவது சிந்தித்தார்களா? அதுவும் இல்லை.
உதவிதான் செய்யவில்லை சரி, உபத்திரவமாவது செய்யாமல் இருக்கலாமே.
மாற்று குழுக்கள் இன்னும் திருந்தவில்லை. கொள்கைகளை விட்டு விலக வில்லை. உடனடியாக மாற்று குழுக்கள் அனைத்தையும் தடைசெய்ய ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானம் ஒன்றை எடுத்து செயற்பட வேண்டும்.
இல்லாவிட்டால் இவர்கள் வன்முறை மனப்பாங்குடன் இவ்வாறு கப்பம் கோருவது, அச்சுறுத்துவது போன்ற ரவுடித் தனத்தைக் தொடர்ந்தும் காண்பிப்பர் என மேலும் குற்றஞ்சாட்டினார்.
வவுனியாவைச் சேர்ந்த ஜாக்சன், தான் கண்டுபிடித்த இரண்டு பொருட்களுக்கான உரிமையை 200 கோடி ரூபாவிற்கு விற்று அனைவரது கவனத்தையும் குறுகிய காலத்திற்குள் தன்பக்கம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.