மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத்தண்டனை!
வரி ஏய்ப்பு வழக்கில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மற்றும் பார்சிலோனா வீர்ர் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனையும் 15 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் லயனல் மெஸ்சி, கடந்த 2007 முதல் 2009 ம் ஆண்டு வரை, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
தனது விளம்பர வருவாயை , உள்ளதை விட குறைவாகக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பின்படி ரூ. 60 கோடி ரூபாய்) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜார்ஜ் ஹார்ஷியோ மீதும் வழக்கு தொடரப்பட்டது.
ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் கிடைத்த வருமானத்தை சுவிட்சர்லாந்து, பிரிட்டன், உருகுவே உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைத்த வருவாயாக காட்டி, இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக மெஸ்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு பார்சிலோனா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிமன்றத்தில் மெஸ்சி, ‘ தனக்கு எங்கிருந்து எப்படி வருவாய் வருகிறது என்று தெரியாது என்றும், தனது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தனது தந்தை ஜார்ஜ்தான் கவனித்து வருவதாக’ தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டதையடுத்து, மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனையும் ரூ. 15 கோடி அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது பார்சிலோனா நீதிமன்றம். மெஸ்சியின் தந்தை ஜார்ஜ் ஹார்ஷியோவுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த தீர்ப்பை எதிர்த்து ஸ்பெயின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.