மகனுக்கு கொடூர தண்டனை வழங்கிய பெற்றோர்: 5 நாட்களாகியும் சிறுவனை கண்டுபிடிக்க திணறும் மீட்புக்குழு!
ஜப்பான் நாட்டில் தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர் தனியாக கொடூரமான விலங்குகள் சுற்றி திரியும் காட்டில் விட்டு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 நாட்களாக சிறுவனை காட்டிற்குள் தேடி வரும் 130 பேர் கொண்ட மீட்புக்குழுவினர், தற்போது வரை சிறுவனை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகின்றனர். இதனால் ராணுவத்தின் உதவியை நாடி உள்ளனர்.
ஜப்பானின் வடபகுதி தீவான ஹொகைடோவில் பெற்றோர்கள் சேட்டை செய்த தங்கள் 7 வயது மகனை கொடூர விலங்குகள் உள்ள காட்டில் தனியாக விட்டு விட்டு வந்து உள்ளனர். பின்னர் சென்று பார்த்த போது சிறுவனை காணவில்லை.
பெற்றோர் தனது பிள்ளையை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளனர். விசாரணை நடத்திய போது பெற்றோர்கள் நாடகமாடியது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறும் போது, ‘எனது மகன் படுசுட்டியாக இருந்தாலும்,அவனை தைரியமிக்கவனாகவும் ஒழுக்கம்மிக்கவனாகவும் வளர்ப்பதே எனது லட்சியம். எனது மகனுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக தான் அவனை காரிலிருந்து இறக்கி வனத்தில் விட்டு வந்து விட்டோம்’ என கூறியுள்ளார்.
பெற்றோரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் ஹெலிகாப்டர்களில் 130 பேர் கொண்ட மீட்புபடையினருடன் காட்டிற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டுவந்தனர்
மலைப்பகுதியில் அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில், அவனைத்தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் ராணுவத்தின் உதவி நாடிஉள்ளனர். ராணுவத்தின் தற்காப்புப் படையை இந்தப் பணியில் உதவுமாறு நெனே நகர அதிகாரிகள் கோரியுள்ளனர்.
எளிதில் நெருங்க முடியாத பகுதிகள், ஆழமான குகைகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.