புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!
அனைத்து சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவினால் வெற்றி கொள்ளப்பட்டது என்றும், இவ்வாறானதொரு சூழல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது எனவும் இந்திய ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள புதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, After the Fall : Sri Lanka in Victory and War (அழிவிற்குப் பின்னர்: வெற்றி மற்றும் போரில் சிறிலங்கா) என்கின்ற நூலில், இதன் ஆசிரியரான மோகன் கே. ரிக்கு, ‘நான்காம் ஈழப்போர் ஆரம்பித்தது தொடக்கம் அது முடிவுறும் வரையில் அனைத்துலக சமூகமானது இதற்கு முற்றிலும் உடந்தையாக இருந்துள்ளதாக’ வாதிடுகிறார்.
‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கமானது ஆயுதக் குழுக்களின் வரலாற்றில் தனியொரு இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கைத்தீவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளின் விளைவாக மிக முக்கிய இன, அரசியல், வரலாறு, கலாசார நிபந்தனைகளின் தொகுப்பாகவே விடுதலைப் புலிகள் அமைப்பானது தோற்றம் பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது மீண்டும் தோற்றம் கொள்ளலாம் என்கின்ற சந்தேகங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம்’ என ரிக்கு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதி காக்கும் படையினர் நிறுத்தப்பட்டிருந்த 1987-90 வரையான காலப்பகுதியில், இந்தியாவின் முன்னணி நாளிதழான ‘ஹிந்துஸ்தான் ரைம்சின்’ சிறிலங்காவிற்கான செய்தியாளராக மோகன் ரிக்கு செயற்பட்டிருந்தார்.
இதன் பின்னர் இவர் சிறிலங்கா தொடர்பாக Sri Lanka : A Land in Search of Itself என்கின்ற பெயரில் நூலொன்றை எழுதியிருந்தார். இந்த நூலானது தேசிய நூல் நிதியத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது ரிக்கு எழுதியுள்ள ‘அழிவிற்குப் பின்னர்: வெற்றி மற்றும் போரில் சிறிலங்கா’ என்கின்ற நூலானது சிறிலங்கா தொடர்பான இவரது இரண்டாவது நூலாகும்.
ஏழாண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவில் மிகக் கொடிய இரத்தம் சிந்திய போர் நிறைவுக்கு வந்த கையோடு, ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ எவ்வாறு நடத்துவது மற்றும் அதை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பாக சிறிலங்காவின் போர் வெற்றி அனுபவத்திலிருந்து அனைத்து உலக நாடுகளும் கற்றுக்கொள்ள முடியும் என ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக மியான்மார், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்கா பெற்றுக் கொண்ட போர் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தன. ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை.
‘அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஸ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, லிபியா (அது எவ்வளவு தூரம் பெறுமதி மிக்கதாக இருந்த போதிலும்) போன்ற அனைத்து நாடுகளும் ஒன்றாக ஒரு கூட்டணியில் வேறெங்காவது நின்றதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என நூலாசிரியர் ரிக்கு வினவுகிறார்.
சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு அப்பால், உலக நாடுகள் எவ்வித வாதப் பிரதிவாதங்களுமின்ற ஒன்றாக ஓரணியில் இணைந்து நின்றமையே சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற விளைவுக்கு முக்கிய காரணமாகும் என ரிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வகையில் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் சமூகமும் தமிழர்களுடன் இணைந்திருந்தால், இரு தரப்பிலிருந்தும் கணிசமான செல்வாக்கைச் செலுத்தி தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டிருக்க முடியும் எனவும் இது நடந்திருந்தால் போரின் இறுதி முடிவானது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் ரிக்கு குறிப்பிடுகிறார்.
ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் அல்லது தனியாகச் செயற்பட்டால் தமது குறுகிய கால நலன்களை அடைந்து கொள்ள முடியும் என முஸ்லீம் தலைவர்கள் நினைத்தனர்.
ஆனால் இதன் விளைவாக 2014ல் சிறிலங்காவில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக பொது பல சேன தாக்குதல்களை மேற்கொண்ட போது, பெரும்பாலான மக்கள் தமக்கு ஆதரவாக அணிதிரளவில்லை என்பதை முஸ்லீம் தலைவர்கள் கண்டுகொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.