தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு அரசாங்கத்துக்கு சேவகம் செய்யும் கட்சியாக மாறியுள்ளது என மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி 2009ஆம் ஆண்டுடன் வலுவிழந்து விட்டதாகவும், தற்போது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து கிடைக்கக்கூடியதைப் பெறுவதுதான் யதார்த்தம் எனத் தெரிவிக்கப்படுகின்றது என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு யுத்தமானது ஒன்றரை இலட்சம் மக்கள் அழித்தொழிக்கப்பட்டே நிறைவு பெற்றது. இதன்மூலம் சர்வதேசத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒரு இனப்படுகொலை அரசாங்கம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன.
அத்துடன், உலகத்தில் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
ஆகவே தமிழர் பேரம் பேசுவதற்கு பல கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சேவகம் செய்யும் கட்சியாக மாறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.