யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் கொடூரமாக செயற்பட்டதால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக கூற முடியாதென முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ்குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார், சுவிட்ஸர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அந்நாட்டு மாபியா குழுவொன்றுடன் பேரம் பேசியே வித்தியாவை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி படுகொலை செய்ய வந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ்குமார் புலம்பெயர் தமிழர் என்பதற்காக அனைவரையும் அவரைப் போல கருத முடியாதென பஷில் கூறியுள்ளார். எனினும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை சிறந்த விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ராஜபக்ஷவினருக்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெறும் முனைப்பில் ராஜபக்ஷ தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் வடக்கு கிழக்கில் பஷில் தலைமையிலான குழுவினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.