இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்: 2 பேர் உயிரிழப்பு
சிரியாவில் ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் புராதன நகரமான பல்மைராவில் வைத்து ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதில் பயணம் மேற்கொண்டிருந்த 2 ராணுவ விமானிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Mi-25 ரக விமானமானது சிரியாவின் பல்மைரா பகுதியில் வெள்ளோட்டம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மறைந்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரஷ்ய விமானிகள் இருவரும் உதவிக்கு சிரியா ராணுவத்தினரை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதனிடையே பதில் தாக்குதல் நடத்தி வந்த விமானிகள் போதிய படைத்தளவாடம் இல்லாததை அடுத்து ராணுவ முகாமிற்கு திரும்பும் வழியில் ஐ.எஸ் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இதுவரை 10 ரஷ்ய ராணுவத்தினர் பலியாகியுள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணிக்கை அதிகமிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிரியாவின் ஆசத் அரசுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ரஷ்யா தீவிரவாத குழுக்கள் மீது அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
ஆனால் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்களில் இதுவரை 2,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.