பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று (22) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, மாவை சேனாதிராஜா,சந்ரசிறி கஜதீர,பிமல் ரத்னாயக்க ஆகியோர் அடங்கியிருந்தனர்.
அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் ஐ.ம.சு.மு எம்.பிக்கள் இருவர் தவிர ஏனையோர் பங்கேற்றதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் இதன் போது அறிவித்துள்ளார்.
தொடர்புபட்ட எம்.பிக்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இந்த அறிக்கையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சுமார் 40 பேரின் பெயர்கள் அடங்குவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழப்பநிலை தொடர்பாக இந்தக் குழு முழுமையாக ஆராய்ந்துள்ளதோடு சம்பந்தப்பட்ட பலரிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளது. பாராளுமன்ற ஒளிப்பதிவுகள் மற்றும் ஊடகங்களின் நெறிப்படுத்தப்படாத ஒளிப்படக்காட்சிகள் என்பனவும் ஆராயப் பட்டதாக குழு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்: பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்திய எம்.பிக்களுக்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது தொடர்பாகவும் இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். குற்றவியல் சட்டத்தின் கீழ் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். பாராளுமன்றத்தினுள் தவறு நடந்தால் அது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது குறித்தும் சபாநாயகரே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
ஓகஸ்ட் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து பாராளுமன்றம் கூடிய போது சபை நடுவில் திரண்டு ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் மோதலில் ஈடுபட்டதுடன், எம்.பிக்கள் மீது மிளகாய்த்தூள் தாக்குதலும் நடத்தப்பட்டன.இதன் போது சில எம்.பிக்கள் காயமடைந்ததோடு பாராளுமன்ற உடைமைகளும் சேதமாக்கப்பட்டன.

