தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாரிசு நடிகரான விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரெய்டு’ எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ ரெய்டு ‘. இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகை அனந்திகா நடிகர்கள் சௌந்தரராஜா, டேனியல் ஆனி போப், ஹரிஷ் பெராடி, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘தகரு’ எனும் திரைப்படத்தின் மறுஉருவாக்கமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் எம். முத்தையா வசனம் எழுதி இருக்கிறார்.
ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் கே கனிஷ்க் மற்றும் ஜி. மணிகண்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதனை எம் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். முத்தையா வழங்குகிறார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியுட்டிற்கு தயாராகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் விக்ரம் பிரபுவின் எக்சன் காட்சிகளும், அனல் தெறிக்கும் பஞ்ச் டொயலாக்குகளும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.