‘வதந்தி சீசன் 2:தி மிஸ்ட்ரி ஆஃப் மணி” இணையத் தொடர் விமர்சனம்
தயாரிப்பு : வால்வாட்சர் ஃபிலிம்ஸ்
வெளியீடு : பிரைம் வீடியோ
வெளியீட்டு திகதி : ஓகஸ்ட் 7 2026
வகைமை : குற்ற புலனாய்வு விசாரணை
அத்தியாயங்கள் : எட்டு
நடிகர்கள் : சசிகுமார், அபர்ணா தாஸ், யஷ்வந்த், ரேவதி சர்மா, அனகா மருதோரா, விவேக் பிரசன்னா, அர்ஜுன் நந்தகுமார், அர்ஜுன் சக்கரவர்த்தி மற்றும் பலர்.
இயக்கம் : ஆண்ட்ரூ லூயிஸ்
மதிப்பீடு : 2.5/5
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்- புஷ்கர் & காயத்ரி – பிரைம் விடியோ – கூட்டணியில் ‘வதந்தி சீசன் 1 : தி ஃபேபுள் ஆஃப் வெலொனி’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி ‘ எனும் க்ரைம் திரில்லர் ஜேனரிலான இணைய தொடர் உருவாகி இருக்கிறது. சீசன் 1 ஐ போல் இதற்கு இந்த இணைய தொடரை பார்வையிடும் ரசிகர்களிடம் பாரிய வரவேற்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள பிரபலமான மாநகரத்தின் புறநகர் பகுதியில் இந்திய அரசு நெடுஞ்சாலை விரிவாக்க திட்ட பணிகளை தொடங்குகிறது. இதற்காக நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர்களும், ஊடகங்களும் பங்கு பற்றி இருக்கும் போது எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. இது தேசிய அளவிலான கவனத்தை பெற்றதால்… காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்குகிறது. இந்த விசாரணையை மதுரையில் குறைவான அதிகாரம் கொண்ட காவல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றும் மூசா ராசா ( சசிகுமார்) மேற்கொள்கிறார். ஒரு கை இல்லாத- காலத்தை துல்லியமாக அவதானிக்க இயலாத – ஒரு எலும்புக்கூட்டை வைத்து புலன் விசாரணையை மூசா ராசா தொடங்குகிறார். இந்த விசாரணையில் அந்த எலும்புக்கூட்டுடன் மற்றொரு எலும்புக்கூடும் கிடைக்க… உடற் கூறுவியல் பரிசோதனை அறிக்கையின் படி அவர்கள் பெண்களாக இருக்க…. வழக்கின் விசாரணை திசை மாறுகிறது. இதற்காக சிறையில் கைதியாக இருக்கும் முடக்கத்தான் மணி பிணையில் விடுவிக்கப்படுகிறார். ஆனாலும் காவல்துறை அந்த இரண்டு பெண்களை கொலை செய்து யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதை விசாரிக்க தொடங்குகிறது. இதில் கிடைத்த விவரம் என்ன? என்பதை விவரிப்பது தான் நான்கு மணி தியாலத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த இணையத் தொடரின் கதை.
பொதுவாக க்ரைம் திரில்லர் ஜேனரிலான இணைய தொடர் என்றால் குற்றவாளி யார்? என்ற இலக்கை நோக்கித்தான் விசாரணை செல்லும். ஆனால் இந்தத் தொடரில் இவற்றுடன் இந்த சமூகத்தில் வாழும் சில புதிரான மனிதர்களின் வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க இயலாத வகையில் திரைக்கதை பயணித்தாலும்.. ஒன்று -இரண்டு -எட்டு- ஆகிய அத்தியாயங்களில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் ஒரு விறுவிறுப்பு ஏனைய அத்தியாயங்களில் குறைவுதான்.
காவல்துறையினரின் வாழ்வியலை இயல்பாக விவரிக்கிறோம் என்ற பெயரிலான திரைக்கதையில் எந்த வகையிலும் பங்களிக்காத ‘சுமையா’ கதாபாத்திரம் ஏன்?
காவலர் மோகனின் கதாபாத்திர வடிவமைப்பில் ஏன்? இந்த முரண்பாடு. காவல்துறை அதிகாரியான ராதிகாவின் கணவரான சட்டத்தரணி சுகுமாரனின் கதாபாத்திரத்தை அம்போ..! என்று அந்தரங்கத்தில் விட்டது ஏன்? எப்படி பல லாஜிக்கான கேள்விகள் இருந்தாலும்… மூசா ராசாவின் கதாபாத்திர வடிவமைப்பிலும்… அதன் காட்சி மொழியாக்கமும் … நல்லதொரு கவனத்தை பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தின் வாழ்வியல் பற்றுக்கோடு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கிறது.
முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தின் முரண்பாடு குறித்து பார்வையாளர்கள் எளிதாக யூகித்து விட முடிகிறது. ஆனால் அதற்கான துல்லியமான பின்னணியை மட்டும் இயக்குநர் வித்தியாசமாக யோசித்து உரைத்திருப்பது ஓகே.
எந்தத் தவறும் செய்யாத நீலாவதி கதாபாத்திரத்திற்கான எழுத்தில் முழுமையில்லை.
ராமர் கதாபாத்திரம்- வட்டார மொழியை உச்சரித்தாலும் அதில் செயற்கைத் தனம் அப்பட்டமாக எட்டிப் பார்க்கிறது.
ஆனால் மூசா ராசா – சுமையா- முடக்கத்தான் மணி – நீலாவதி – என ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான நடிப்பை வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்கள். அதிலும் குறிப்பாக சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தியின் உச்சகட்ட கட்சி நடிப்பு சிறப்பு.
ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் சஸ்பென்ஸ் இடம் பெற வேண்டும் என்பதற்காக சில காட்சிகளையும், விடயங்களையும் வலிந்து திணித்திருப்பது உறுத்தல்.
எட்டு அத்தியாயங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்து காண்பதற்கு ஊக்கமளிப்பது இரண்டு விடயங்கள் ஒன்று ஒளிப்பதிவு…. மற்றொன்று பின்னணி இசை. இதை செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தாராளமாக பாராட்டு தெரிவிக்கலாம்.
வதந்தி 2 – இரட்டிப்பு அவந்தி












