ஜப்பானின் அய்ச்சி – நகோயாவில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பத்திரகே திங்கட்கிழமை (28) வென்று கொடுத்து வரலாறு படைத்த போதிலும் ஏனைய விளையாட்டு நிகழ்ச்சிகளில் இலங்கைக்கு எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை.
ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அயோமல் அக்கலன்க ஐந்தாவது இடத்தைப் பெற்றார்.
அப் போட்டியை அயோமல் அக்கலன்க 49.37 செக்கன்களில் ஓடி முடித்தார்.
அப் போட்டியில் கத்தார் வீரர் பஸெம் ஹெமெய்தா (47.82 செக்.) தங்கப் பதக்கத்தையும் ஜப்பான் வீரர் டய்ஜு கோட்டோ (47.93 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் சைனீஸ் தாய்ப்பே வீரர் சுங்-வெய் லிங் (48.74 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அப் போட்டியை 39.55 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆவது இடத்தைப் பெற்றது.
இலங்கை தொடர் ஓட்ட அணியில் ரொஷான் ரணதுங்க, சமோத யோதசிங்க, மேரொன் விஜேசிங்க, தினேத் வீரரட்ன ஆகியோர் இடம்பெற்றனர்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை டக்ஷிமா கொடிதுவக்கு அப் போட்டியை 2 நிமிடங்கள், 08.06 செக்கன்களில் நிறைவுசெய்து 7 வீராங்கனைகளில் 6ஆம் இடத்தைப் பெற்று வெளியேறினார்.
இரண்டு தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றிய 14 வீராங்கனைகளுக்கான ஒட்டுமொத்த நிலையில் டக்ஷிமா 11ஆவது இடத்தைப் பெற்றார்.
டோக்கியோ நீர்நிலை நிலைய தடாகத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒரு மீற்றர் உயர உந்துவிசைப் பலகை (1 Metre Springboard) டைவிங் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் துலாஞ்சன் பெர்னாண்டோ 220.35 புள்ளிகளுடன் 13ஆவது இடத்தைப் பெற்றார். இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்குபற்றினர்.
பெண்களுக்கான கொம்பவுண்ட் தனிநபர் வில்லாளர் நீக்கல் போட்டியில் கத்தார் வீராங்கனை ஆய்ஷா அல்-சாயேயை எதிர்த்தாடிய இலங்கை வீராங்கனை ரெஹானா தயாபல்லி 136 – 135 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை ஈட்டினார்.
ஆனால் அடுத்த சுற்றில் ஈரான் வீராங்கனை ஒஸ்குவெய் பிட்டாவிடம் 140 – 146 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ரெஹானா தயாபல்லி தோல்வி அடைந்து வெளியேறினார்.
இதேவகையான மற்றொரு போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை மிச்சிகொ ப்ரியன்னாவிடம் இலங்கை வீராங்கனை அநுராதா கருணாரட்ன 136 – 141 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிவந்த இலங்கை முதலாவது வெற்றியை இன்று ஈட்டியது.
கிஃபு மாகாண க்றீன் விளையாட்டரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தோனேசியாவுக்கு எதிரான ஹொக்கி போட்டியில் 4 – 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது.
கய்யோ யச் துறைமுக கடலில் நடைபெற்ற பெண்களுக்கான டிங்கி பாய்மர படகோட்டத்துக்கான இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் இலங்கை வீராங்கனை ஏரியானா தாலியா ட்ரன்ச்செல் 11ஆம் இடங்களைப் பெற்றார்.
ஆண்களுக்கான டிங்கி பாய்மர படகோட்டத்துக்கான இரண்டு தகுதிகாண் போட்டிகளில் உதார ராஜபக்ஷ முறையே 14ஆவது, 18ஆவது இடங்களைப் பெற்றார்.












