Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பெண் புலிகளை கொச்சப்படுத்தும் பேமிலிமேன் 2ஐ தடை செய்ய வேண்டும்! கவிஞர் தீபச்செல்வன்

May 26, 2021
in Cinema, News, கட்டுரைகள்
0

அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது என்று கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். சர்ச்சை தோற்றுவித்துள்ள பேமிலி மேன் 2 இணைய தொடர் குறித்து அவர் தமிழ்நாடு பத்திரிகை ஒன்றில் அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.

திரைப்படக் கலை வடிவம் என்பது ஒரு மகத்துவமான கலை. கலை என்பது அடிப்படையில் எளிய மனிதர்களின் நிகழ்த்துகையாகவே இருக்கிறது. அதிலும் ஆற்றுகை என்பது விளிம்புநிலை மனிதர்கள், இந்த சமூகத்தின் போக்கு குறித்து செய்யும் விமர்சனமாகவும் பதிவாகவும் இருக்கிறது. ஆனாலும் கலை எப்போதும் அதிகாரத்திற்கு எதிரானதான ஒரு பாடலாகவே இருக்கிறது. இனிமை, துயரம், கிண்டல் கேலி என வாழ்வின் பாடுகளை பேசுகின்ற கலையை நிகழ்த்துகின்ற எளியவர்கள்தான் அதன் மெய்யான நாயகர்களாகவும் இருக்கிறார்கள்.

கலை யாருக்கு முன்னால் நிகழ்த்தப்படுகிறது என்பதை வைத்து, அது அதிகாரத்தை பற்றிய பாடுபொருளாக அமைந்துவிடும் என்றும் கருதலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை பற்றிய பாடல்களின் உட்பக்கங்களில் அதன் நாயகர்களான எளிய மனிதர்கள் இருப்பதையும் காணலாம். தரையில் நிகழ்த்திய ஆற்றுகை கலை என்பது நவீன தொழிநுட்ப சாதனங்களின் வருகையால், திரையில் காண்பிக்கப்படுகிறது. இன்று சமூகத்தின் பல்வேறு நிலைப்பட்ட கதைகளைப் பற்றிய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கலையின் உன்னதத்தை இலக்கியத்தின் மகத்துவத்தை திரைப்படங்கள் எளிய வெகுசன மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் முக்கியமான ஊடக வழியாகும்.

வாழ்வின் மகத்துவங்கள், உண்மை நாயகர்கள், எளிதான பேருணர்ச்சிகள் என்று இன்றைய திரைப்படங்கள் பல பாடுபொருட்களைத் தொடுகின்றன. நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இன்றைக்கும் புதுமைக்கும் புத்துணர்ச்சிக்கும் பஞ்சம் ஏற்படவில்லை. தமிழ் சினிமா என்பதனுள் ஈழ சினிமாவும் உள்ளடங்குகின்றது. எப்படியாகினும், தமிழ் சினிமா இன்று உலக சினிமாவாக கொண்டாடப்படுவதில் முக்கிய பங்கை உலகம் எங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்கள் வகிக்கின்றனர். வெறும் பார்வையாளர்களாக இல்லாமல்,  தமிழினின் மிகப் பெரும் பொருட்செலவுடன் வருகின்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களாக ஈழத் தமிழ் தயாரிப்பாளர்கள் இருப்பதும் நாம் அறிந்த விடயம்தான்.

ஆனாலும் இதற்குள் சில நெருக்கடிகளும் ஈழத் தமிழர்கள் சார்ந்து ஏற்படுத்தப்படுகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகின்ற வேலையை இலங்கை அரசாங்கம் பல்வேறு மட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழ் மக்களை மிக ஆழமாக நேசிக்கின்ற அல்லது தொடர்புபடுகின்ற தமிழ்நாடு சினிமாத்துறைமீதும் உள்ளும் புறமுமான சில அரசியல் தலையீடுகளை அல்லது ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக திருப்புகின்ற காய் நகர்த்தல்களை ஒரு தேர்ந்த திரைக்கதையின் திருப்பம் போல செய்கிறது இலங்கை அரசு.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலகத் தமிழ் மக்களின் இதங்களிலும் தெய்வமாக நேசிக்கப்படுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக தவறான சித்திரிப்புக்களை ஏற்படுத்தும் விதமாகவும் சில திரைப்படங்களும் சில திரைப்படங்களில் சில காட்சிகளும் சில வசனங்களும் இடம்பெறச் செய்யப்படுகின்றன. அதேநேரம்,  தமிழ்நாடு திரைப்படங்கள் சிலவற்றில் ஈழ உணர்வு மிகச் சரியாகவும் நுட்பமாகவும் எடுத்துரைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.

கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படம், ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினத்தால் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் பல இடங்களில் மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளன. ஆனால் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் போல காண்பிப்பது எல்லா இடங்களிலும் வலிந்து செய்யப்பட்டிருக்கும். சிங்களவர்கள் வரக்கூடிய இடங்களில் எல்லாம் அவர்களை மிகச் சிறந்தவர்களாக இயக்குனர் காண்பிப்பதும்கூட வலிந்து திணித்தலாகவே இருக்கும்.

சில இடங்களில் குழந்தைப் போராளிகளை காண்பிப்பதுடன் அவர்களை மிகக் கொடூரமானவர்கள் போலவும் சித்திரிக்கப்பட்டிருக்கும். யுத்த நிலம் எது? அங்கே யார் இருப்பார்கள்? புலிகளின் நிலப்பகுதி எப்படி இருக்கும்? இராணுவத்தின் நிலப்பகுதி எப்படி இருக்கும் என்ற காட்சிகள் எல்லாமே மிகுந்த குழப்பத்தை தருகின்றது. அதுவே புலிகள் பற்றியும் ஈழப் போர் பற்றியும் பல தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றது. விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இல்லாமல் ஈழத்தில் நிகழ்கின்ற போரை அதன் அடி வேரை நியாயமான பார்வையுடன் அணுகியிருந்தால் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஆகச்சிறந்த படமாக இருக்கும்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இயக்குனர் மகேந்திரனை சந்தித்த போது, கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் எங்களை சரியாக காட்டத் தவறியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளதாக இயக்குனர் மகேந்திரன் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்டம், ஒருபோதும் சிங்களவர்களுக்கு எதிரானதல்ல. அத்துடன் சிங்கள மக்கள் கொடுமையானவர்கள் என்பதை ஒருபோதும் ஈழ விடுதலைப் புலிகளோ, மக்களோ கருதியதும் இல்லை. ஆளும் சிங்களப் பேரினவாத அரசும் அதன் இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகவே ஈழத் தமிழரின் போராட்டம்.

ஆனால் சில திரைப்படங்களும் சில இயக்குனர்களும் சில எழுத்தாளர்களும்கூட இலங்கை அரச பீடங்களுக்கு ஏனோ விசுவாசமாக அடிமைத்தனமாக இருக்க முயல்கின்றனர். அதனை அவர்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் பற்றிய வாழ்க்கையை படமாக்க தமிழ்நாட்டில் ஒரு முயற்சி துவங்கிய போது, அதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனபோது அதனைப் பற்றி விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கு தகவல் தந்து அதனை சுட்டிக்காட்டி எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

முத்தையா முரளீதரன் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு படம் வரக்கூடாது  என்பதற்கான நியாயங்களை எழுதினேன். அதனை பலரும் வலியுறுத்திக் கூறினார்கள். விஜய்சேதுபதி இரும்புப்பிடியாக நின்றார். பின்னர் உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்தது. இறுதியில் அதிலிருந்து விஜய் சேதுபதி நளுவினார். போர் முடிந்த பின்னர் நடிகை அசின் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுடன் யாழ்ப்பாணம் வந்ததுடன் அவரது தமிழ்நாட்டு திரைப்பட சரித்திரம் முடிந்தது. இப்போது அஸின் செய்த வேலையை நடிகை சமந்தா செய்யத் துவங்கியுள்ளார்.

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தின் வாயிலாக கீர்த்தி சுரேஷ் மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றார். ஒரு நடிகையின் இருண்ட பக்கங்களை தேடிச் செல்லுகின்ற பத்திரிகையாளராக அந்தப் படத்தில் சமந்தா நடித்திருப்பார். அதுபோன்ற வாய்ப்புக்கள் திரைப்பட வரலாற்றில் அவ்வப்போதுதான் கிடைக்கும். ஆனால் இப்போது சமந்தா நடித்துள்ள பெமிலி மேன் 2 என்ற இணையத் தொடரில் ஒரு தமிழ் தீவிரவாதியாக அவர் நடித்திருப்பது தமிழகத்தை கடும் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

“சென்னையில் எல்லோரையும் கொல்லுவேன்..” என்ற ஒரு வசனம் கிட்டத்தட்ட ஈழப் பேச்சு மொழியில் வருகின்றது. அது விடுதலைப் புலிப் பெண் போராளி அல்லது பெண் கரும்புலி என்பதைப் போலவும் அவர் மிகக் கொடுமையான தீவிரவாதியாகவும் காட்டப்படுவதாகவும் தமிழ்நாட்டு இன உணர்வாளர்களும் திரைத்துரை சா்ர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். முன்னோட்டமும் இதையே உணர்த்துகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண் புலிகள் மற்றும் பெண் கரும்புலிகளின் உன்னத தியாகமும் வாழ்வும் மிகப் பெரிய காவியம். அவர்களின் போராட்டப் பாதைகளும் அனுபவங்களும் போல இந்த உலகில் உன்னதமான கதைகள் எதுவும் இல்லை. இதனை இன்றைக்கு இந்தியா மாத்திரமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் உணர்த்து எடுத்துரைத்து வருகின்றனர். அத்துடன் இன்று புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் இந்த உலகம் தவிர்க்க முடியாமல் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டு வருகின்றது. இந்த சூழலில் மிகவும் தவறான பிற்போக்கான இந்த இணையத் தொடரை உடன் தடை செய்ய வேண்டும்.

நடிகை சமந்தா தன் நடிப்பு எதிர்காலத்தை பழாக்கக்கூடாது. உடனடியான இந்த இணையத் தொடரை மீளப் பெற்று, அதனை ஒலிபரப்பாவதை தடுக்க வேண்டும். இந்தப் படத்தின் இயக்குனரும் இதனை உணர்ந்து கைவிட வேண்டும். திரைத்துரையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய மகத்துவமான வரலாறும் உலகமெங்கும் ஈழத் தமிழ் மக்களும் உள்ளனர். அத்துடன் இந்த விடயத்தில் அனைத்து திரைத்துரைசார் கலைஞர்களும் கலை இலக்கிய நண்பர்களும் விழித்து எதிர்வினையாற்றி செயலாற்ற வேண்டியது மிகுந்த அவசியமான கலைப்பங்களிப்பாகவும் இருக்கிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மட்டக்களப்பில் 97 பேருக்கு கொரோனா

Next Post

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு ஆபத்து

Next Post

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures