Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா. மனித உரிமை சபையும் ஈழ தமிழரும்

July 31, 2016
in News, Politics
0

ஐ.நா. மனித உரிமை சபையும் ஈழ தமிழரும்

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை சபையின் 32வது கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், இவ் மனித உரிமை சபையில் நேர்மையாக விசுவாசமாக திடகாத்திரமாக தமிழீழ மக்களிற்கான நீதிக்கு, அரசியல் உரிமைகளிற்கும் எதிர்காலத்தில் என்ன செய்யமுடியும், என்ன செய்யலாம் என்பது மிகவும் முக்கியம்.

நாம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாது, இதனால் ஏற்பட்டு நன்மை தீமைகளின் பங்காளிகளாகவும், பகைவர்களாகவும் திகழ்ந்து வருகிறோம். நாம் 1990ம் ஆண்டு இச் செயற்பாடுகளில் ஆரம்பத்திலிருந்து, அன்றும் இன்றும் என்றும், மாறுபட்ட சிறிலங்கா அரசுகள் எம்மை ஓர் பகைவர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்கி வருவதுடன், நாமும் அதற்கான விலையை நாளுக்கு நாள் கொடுத்த வண்ணம் உள்ளோம்.

மனித உரிமை செயற்பாடு, விசேடமாக ஐ.நா. செயற்பாடு என்பது படித்து அறிந்து – சட்ட வல்லுனர், புத்திஜீவிகளின் ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டிய ஒன்று. இவ் விடயத்தில் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தர்க்கம் செய்யவோ, தாம் நினைத்ததை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளிற்கு மாறாக சாதிக்க முடியாது.

சர்வதேச சட்டத்துடனான வரையறைகள், சாரங்களின் அடிப்படையிலேயே மனித உரிமை விடயங்கள் பரீசிலீக்கப்படுகின்ற காரணத்தினால், சர்வதேச மனித உரிமை செயற்பாடுகளும் இதற்கு ஏற்ற வகையிலேயே அமைய வேண்டும்.

ஆகையால் இச் செயற்பாட்டிற்கு எண்ணிக்கையான செயற்பாட்டாளர்களிற்கு மேலாக, படித்து அறிந்து சர்வதேச அணுகுமுறை, சட்டங்களிற்கு ஏற்ற முறையில் ஐ.நா.வின் மொழிகளான – ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய, சீனா, ருசியா, அரபு மொழிகளில் ஆளுமை கொண்ட சில செயற்பாட்டாளர்கள் போதுமானதே. ஒரு இருவர் கொண்ட அமைப்பு என்பதற்கு மேலாக அவர்களினால் செய்யப்படும் காரியங்களே முக்கியமானது.

சுருக்கமாக கூறுவதனால், எண்ணிக்கைக்கு மேலாக, ஐ.நா. பற்றிய புத்தகப் படிப்பு கொண்ட தரமானவர்களே முக்கியமானது. தமிழீழ மக்களை பொறுத்த வரையில், ஒட்டு மொத்தமாக சகலரும் சிறிலங்காவின் ஆட்சியாளரின் அடக்குமுறையின் விளைவுகளினால் பாதிக்கப்பட்டவர்களே.

இவை வகைப்படுத்தலின் அடிப்படையில், ஒவ்வொருவரும் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கிற தாக்கங்கள், மீறல்கள், இன்னல்கள் மாறுபடலாம் என்பதில் எந்த மாற்று கருத்து கிடையாது.

நடைமுறைச் சிக்கல்கள் ஆகையால், பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் ஐ.நா.வில் முகம் காட்ட வேண்டும் என்ற விதி முறை ஐ.நா.வில் கிடையாது. காரணம், பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் போன்று உலகில் உள்ள கோடிக்கணக்கானோர் ஐ.நா.விற்கு நேரில் வந்து தமது ஆதங்கங்களை கூற வேண்டுமென்ற நிலை உருவானால் – இதற்கான நிதி, போக்குவரத்து வசதி, தங்குமிடம், தொலை தொடர்பு, சுகாதாரம், உணவு வசதி போன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் உருவாகும்.

ஆனால் பணம் படைத்தவர்கள் நேரில் வந்து தமது நிலைகளை கூறுவதை ஒருபொழுதும் ஐ.நா. தடுப்பதில்லை. ஆனால் ஐ.நா.விற்கு நேரில் வருகை தரும் பாதிக்கப்பட்டோர், ஐ.நா.வின் விதிமுறைகளிற்கு ஏற்றவாறு செயற்பட தவறும் பட்சத்தில், அவர்களின் ஐ.நா.விற்கான வருகை, ‘விளலிற்கு இறைத்த நீராகி விடுவது’ மட்டுமல்லாது, இவர்களின் வருகையால் குற்றம் சுமத்தப்பட்ட நாடும் அரசும், பல நன்மைகளை பெற்று கொள்வார்கள் என்பதே உண்மை. இதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.

ஆகையால் மனித உரிமை செயற்பாடு என்பது அவதானம், நிதானம், பொறுமையுடன் செய்யப்பட வேண்டியது. இவை தவறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்குமுறை அடக்குமுறையை மேற்கொள்வோர் தொடர்ந்தும் தமது அநியாயங்களை சுதந்திரமாக செய்வதற்கு வழிவகுப்பதுடன், ஐ.நா.மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவையும் பாதிக்கப்பட்டோர் இழப்பார்கள்.

இன்று தமிழீழ மக்களை பொறுத்த வரையில் மூன்று முக்கிய விடயங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. முதலாவதாக, பொறுப்பு கூறல். அதாவது, தமிழீழ மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள நிலம், அரசியல் கைதிகள் உட்பட சகல மனித உரிமை மீறல்கள், சமூக பொருளாதார காலாச்சார பாதிப்பிற்கு பரிகாரம் தேடவேண்டிய கடமைபாடு.

சுய நிர்ணய உரிமை

இரண்டவதாக, அரசியல் உரிமை. இவ்விடயம் மிகவும் பாரீய வேலை திட்டத்தை கொண்டுள்ளது. அரசியல் உரிமை என்னும் பொழுது, சுய நிர்ணய உரிமை என்ற அடிப்படையில், அது உள்வாரீயானதா அல்லது வெளிவாரீயானதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழீழ மக்களுடைய ஆயுத போராட்டம் என்பது வெளிவாரீயான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே நடாத்தப்பட்டு வெற்றியையும் கண்டுள்ளது.

இவ் அடிப்படையில், சிறிலங்கா அரசின் அனுசாரணையுடன் எட்டப்படும் அரசியல் தீர்வானது, நிச்சயம் வெளிவாரீயான சுயநிர்ணய உரிமை கொண்டதாக இருக்குமென யாரும் எதிர்பார்க்க முடியாது.

அப்படியானால், உள்வாரீயான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சிறிலங்கா அரசினால் எதை, தமிழ் தேசிய இனத்திற்கு வழங்க முடியும்? தற்போதைய அரசில் பங்கம் வகிக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏற்கனவே, சமஸ்டி முறையிலான தீர்வை நிராகரித்துள்ள நிலையில், இவர்கள் எதை முன் வைக்க போகிறார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது?

தர்க்க ரீதியாக தமிழீழ மக்களது வெளிவாரீயான சுயநிர்ணய உரிமைக்கு தகுதி உடையவர்கள் என்பதில் ஐயமில்லை. இதேவேளை, தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, இன சுத்திகரிப்பை என்பதும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பதும் நிச்சயம் அரசியல் தீர்வுடன் பின்னிப்பிணைந்து மூன்றவது விடயமாக காணப்படுகிறது. ஆகையால் இவை யாவும் என்று, எப்பொழுது, எவரால், தீர்க்கப்பட்டு தமிழீழ மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு யாரால் பதில் கூறமுடியும்?

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை சபையினால், மேலே கூறப்பட்ட மூன்று விடயங்களில்,

முதலாவது விடயத்திற்கு மட்டுமே பரிகாரம் காணக் கூடிய நிலை உள்ளது. இதற்காக இவை இன்றோ நாளை நடைபெறும் என்று இங்கு கூற முன்வரவில்லை. காரணம் எந்த நாடாக, எந்த இனமாக இருந்தாலென்ன ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகள் என்றும் நத்தை வேகத்திலேயே செல்வதை நாங்கள் காணகூடியதாகவுள்ளது.

தற்போதைய நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் நிபந்தனைளிற்கு அமைய, இவ் பிரேரணை தனது இரண்டாவது கட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம், அதாவது 2017ம் ஆண்டு மார்ச் மாதம் அடையவுள்ளது.

வாய்மூல அறிக்கை

இதனது முதலாவது கட்டம் ஏற்கனவே கடந்த மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் வாய்மூலமான அறிக்கையுடன் முடிவடைந்துள்ளது. அவரது அறிக்கை மிகவும் இறுக்கமானதாக இல்லாவிடிலும், சிறிலங்காவின் பொறுப்பின்மையையும், கால தாமதங்களையும், புதிய கைதுகள் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார்.

இவ் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் வாய் மூல அறிக்கையை, சிறிலங்கா அரசு தமது பரப்புரை வேலைகளிற்கு சர்வதேச ரீதியாக கிடைத்த மாபெரும் வெற்றியாக கொள்ளும் அதேவேளை, தெற்கில் பெரும்பான்மை ஆதரவை கொண்டுள்ள கூட்டு எதிரணியென தமக்கு தாமே பெயர் சூட்டியுள்ள மகிந்த அணியினர், தமது நாட்டின் ஒருமைபாட்டிற்கு ஏற்பட்டுள்ள சவலாக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை பார்க்கின்றனர்.

இதேவேளை, உணர்ச்சி பொங்கும் ஈழத் தமிழர், விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழர் சிலர், இவ் அறிக்கையை ஏற்ற தமிழர்களை திட்டும் அதேவேளை, இவ் வழிகளை தவிர்த்து வேறு எந்த வழியில் பாதிக்கப்படோருக்கு சர்வதேசத்தின் உதவியுடன் நீதி தேட முடியும் என்பதையும் சொல் இயலாது தவிக்கின்றனர். சுருக்கமாக கூறுவதனால், சிங்களதேசம் தமக்குள் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகள் கொண்டிருந்த பொழுதும், தமது இனத்தை நிலத்தை ஏதோ ஒரு கபட நாடகங்கள் மூலம் பாதுகாத்து அபகரித்து விஸ்தரித்து வருகின்றனர்.

இவை யாவற்றிற்கும், ஐ.நா.விற்கு வருகை தரும் பெரும்பான்மையான தமிழீழ மக்களிடையே, ஐக்கிய நாடுகள் சபை பற்றிய ஓர் ஒழுங்கான புத்தகப் படிப்போ கண்ணோட்டமோ காணப்படமையே காரணியாகவுள்ளது.

ஐ.நா. என்றவுடன் சிலராது எண்ணங்கள் யாவும் அர்தமற்ற சிந்தனை கற்பனைகளாகவுள்ளது. ஆயுத போராட்டம் மிகவும் வெற்றிகரமாக நடந்த வேளையிலேயே, தமிழீழ விடுதலை புலிகள் ஐ.நா.பற்றி மிகவும் தெளிவான அழ்ந்த கருத்தை கொண்டிருந்தனர்.

பன்னாட்டு சிக்கல்

ஐ.நா. விடயங்கள் பற்றி, தமிழ் நாட்டின் பசுமை தாயகம் என்ற ஐ.நா.அந்தஸ்த்தை கொண்டுள்ள அமைப்பின் பிரதிநிதியான, திரு அருள் ரத்தினம், பதிவு செய்துள்ள கருத்தை மிகவும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

“தென் சீன கடல் படிப்பினையும் – தமிழ் ஈழமும்” – “சர்வதேச அரங்கில் ஐநாவுக்கு என்று பிரத்தியோக அதிகாரம் எல்லாம் கிடையாது. ஒரு பன்னாட்டு சிக்கலில் எத்தனை நாடுகள் ஆர்வம் செலுத்துகிறார்களோ, அதுவும் எத்தனை பலம் வாய்ந்த நாடுகள் ஆர்வம் செலுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அந்த சிக்கல் கவனம் பெறும்.

எனவே பன்னாட்டு அரசியலில் தமிழீழ போராட்டம் என்பது அதிகமான நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதும், ஐநாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை தொடர்ந்து இழுத்துச் செல்வதுமே ஆகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு – ஐநா அவையின் மூலம் – சுதந்திர தமிழீழத்தை அமைப்போம், கூடவே சேர்த்து, எல்லாம் அமைப்போம் – என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் – பேசுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

நடைமுறையில் எதுவும் இருக்காது.” பன்னாட்டு அரங்கில் இலங்கையை தனிமைப்படுத்தி, மற்ற நாடுகளின் நட்பை நாட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் முன்வர வேண்டும். பன்னாட்டு அரசியல் அரங்கில் வேறு பாதை எதுவும் இல்லை.” (நன்றி) இவற்றை ஏட்டு படிப்பு அற்றோரினால் புரிவது கடினம்.

ஐ.நா.மனித உரிமை செயற்பாட்டை, ஜெனிவா சென்று தான் செய்ய முடியும் என்று நிலைப்பாட்டில் – லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளை சார்ந்த பாதிக்கப்பட்ட ஆயிரம் ஆயிரமானோர் இருந்திருக்கவில்லை. இதற்கு பல ஊதாரணங்கள் உள்ளன.

இதேபோல் அரசியல் விடுதலை பெற்ற நாடுகளான – ஏரித்தீரியா, கிழக்கு தீமோர், கோசவா, தென் சூடான் போன்ற நாடுகளின் உண்மையான நேர்மையான அரசியல் விசுவாசமான செயற்பாட்டாளர்கள், அமெரிக்காவில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்பு சபை போன்றவற்றுடனேயே தமது செயற்பாடுகளை விஸ்தரித்தனால் பலனையும் பெற்றனர்.

அரசியலா, மனித உரிமையா?

ஆகையால் தமிழீழ செயற்பாட்டாளர்களென கூறிக்கொள்வோர், தமது கால நேரத்தை முதலில் தம்மை அரசியலிலா, அல்லது மனித உரிமை செயற்பாட்டிலா அர்பணிக்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தற்பொழுது ஜெனிவாவில் நடைபெறும் அர்த்தம் அற்ற செயற்பாடுகள் யாவும் முடிவிற்கு வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கான பொறுப்புக் கூறல் விடயம் சரியான பாதையில் பயணிக்க முடியும்.

இதேவேளை, மனித உரிமைக்குள் அரசியலை புகுத்தி, இரண்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்யாது – அரசியல் செயற்பாட்டாளர்களென தம்மை கூறிக்கொள்வோர், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, பாதுகாப்பு சபை போன்றவற்றுடன் தமது செயற்பாட்டை விஸ்தரித்து, தமிழீழ மக்களிற்கான வெளிவாரியான சுய நிர்ணய பெற்று கொடுக்க செயற்பட வேண்டும்.

இவற்றை உடனடியாக செய்ய முடியுமென இங்கு கூற முயலவில்லை. இவை தவிர்த்து தற்போதைய செயற்பாடுகள், கழுத்தறுப்புக்கள், காய் நகர்த்தல்கள் யாவும் – பாதிக்கப்பட்டு உள்நாட்டில் தமது நிலங்களை இழந்து, உடமைகளை இழந்து, வாழ வழியில்லாது வாழ்வோரும், அரசியல் விடுதலை போராட்டத்திற்கு பங்களிப்தற்கு முன் வந்து இன்று சிறைகளில் வாடுவோரது நிலையில் எந்தவித முன்னேற்றம் இல்லாது வாழவே வழி வகுக்கிறது.

இன்று முள்ளிவாய்க்கால் முடிந்து ஆறு ஏழு வருடங்களில், ஜெனிவாவின் பெயரால் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பணம் பலராலும் செலவு செய்யப்பட்டும் எதுவித ஆக்க பூர்வமான பலனையும் பாதிக்கப்படோருக்கு கிடைக்கவில்லையானால், தற்போதைய “சாம்பாறு” செயற்பாடே காரணி. இதற்கு திரை மறைவில் சிறிலங்கா அரசு காரணியாக உள்ளது.

ஜெனிவாவிற்கான பரப்புரை வேலை என்பது, தமது நாடுகளில் உள்ள வெளிநாட்டு தூதுவரலாயங்கள் ராஜதந்திரிகளுடன் ஆரம்பமாகி, சர்வதேச நிறுவனங்களின் ஆதரவுடன் தொடர வேண்டும். இவற்றை தமிழீழ மக்கள் தனித்து மேற்கொள்வது முடியாத காரியம் ஆகையால், தெற்கில் வாழும் சிங்கள சிவில் சமூகத்தவரில், திறந்த மனப்பான்மை கொண்டவருடன் இணைந்து முன்நகர்த்த வேண்டும்.

இச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே, கடந்த ஓக்டோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முழு பயனை சர்வதேச சமுதாயத்தின், விசேடமாக ஐ.நா.மனித உரிமை சபை அங்கத்துவ நாடுகளின் ஆதரவுடன் நாம் அடைய முடியும்.

இது தவிர்ந்த வேலைப்பாடுகள் யாவும், சிறிலங்க அரசின் செயற் திட்டத்திற்கு மறைமுகமாக துணை போவதாகவே அமையும், அமைகிறது.

Tags: Featured
Previous Post

தொகுதிவாரியாகவும் மஹிந்தவைப் பலவீனப்படுத்த மைத்திரி வியூகம்!

Next Post

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! மக்கள் கூட்டாக கோரிக்கை

Next Post

மாவீரர் துயிலுமில்லம் வேண்டும்! மக்கள் கூட்டாக கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures