கொரோனா வைரஸ் நோய் தொற்றின் பாதிப்பினை பயன்படுத்தி சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை எவரும் ஏற்படுத்த கூடாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டிலுள்ள ஏனைய வைரஸ்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. மேலும் நாட்டில் இடம்பெறுகின்ற ஏனைய நிகழ்வுகளை கூட தற்போது அனைவரும் மறந்துள்ளனர்.
இந்நாட்டில் பல வருடங்களாக வசிக்கும் சீனர்களை கண்டால் கூட மக்கள் அச்சமடைகின்றனர். அதேபோன்று வேலைத்தளங்களிலும் சீனர்கள் அருகில் எவரும் செல்வதில்லை. இவ்வாறு அவர்களை ஒதுக்கி வைப்பது நல்லதல்ல.
சீனா, இலங்கைக்கு பாரிய உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. எனவே அதனை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
எனவே அவர்களுடைய நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது உலகளாவிய ரீதியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், எமது நாட்டுக்குள் வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கவே நாம் செயற்பட வேண்டுமே ஒழிய, சீனாவுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.