ஹாங்காங்கில் மாதக்கணக்கில் நீடித்து வரும் போராட்டங்களால் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதன் காரணமாக அங்குள்ள ஹோட்டல்கள் பல தங்குவாரின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
77 விழுக்காட்டு ஹோட்டல் ஊழியர்கள் சம்பளமில்லா விடுப்பில் செல்லுமாறு அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி வருவதாக ஹோட்டல், உணவு, பான ஊழியர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த ஹோட்டல் நிர்வாகங்கள் 43 விழுக்காட்டு வேலைகளைக் குறைக்க முடிவு செய்து உள்ளன.
“தொடர் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ஹாங்காங் நகரின் மாண்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்க சிறந்த இடம், முதலீட்டுக்கு உகந்த நகரம் என்னும் பெருமைகளை எல்லாம் அது இழந்து வருகிறது,” என திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டதால் ஹாங்காங்கைச் சுற்றிப்பார்க்கத் திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் அது தெரிவித்தது. ஆகஸ்ட் மாதம் பயணத்துறை 40 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய் பரவலுக்குப் பின்னர் அந்நகரம் சந்தித்த ஆக மோசமான நிலவரம் அது.
ஹாங்காங் முழுவதும் உள்ள 40 ஹோட்டல்களில் பணிபுரியும் 438 ஊழியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பெரிதாகப் பாதிக்கப்பட்ட பின்னரும் ஹாங்காங்கில் 16வது வாரமாக ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. நேற்று மாலையும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
“முன்னேற்றத்திற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை என்பது கவலைக்குரிய அம்சம்,” என்று நகரின் நிதிச் செயலாளர் பால் சான் குறிப்பிட்டுள்ளார்.

